
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த விட்டிருக்க மாட்டார் என்றும் அவரை மீறி நீட் இங்கு நுழைந்திருக்காது என்றும் திமுக தலைமை நிலைய செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் வரை நீட், உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், ஜிஎஸ்டி போன்ற திட்டங்களை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார். அந்த திட்டங்களை தமிழகத்துக்குள் நுழையவிடாமல் தடுத்து வந்தார். இந்த திட்டங்கள் அனைத்தும் தமிழக நலனுக்கு எதிரானது என மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வந்தார்.
ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன, உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் போன்றவற்றை இ,பிஎஸ் – ஓபிஎஸ் அமைச்சரவை எளிதாக ஏற்றுக் கொண்டன.
இதே போன்று நீட் தேர்வை தமிழகத்துக்குள் அனுமதித்ததால் ஏராளமானவர்கள் மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தனர்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு பேட்டி அளித்த திமுக தலைமை நிலைய செயலாளர், துரை முருகன், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த விட்டிருக்க மாட்டார் என குறிப்பிட்டார். அவரை மீறி நீட் இங்கு நுழைந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சி பெண்ணாக இருந்தாலும், நல்ல விஷயங்களுக்கு அவரை தான் பாராட்ட தவறியதில்லை என்றும், அவர் ஒரு ஆளுமைத் திறன் மிக்கவர் என்றும் துரை முருகன் மனம் திறந்து பாராட்டினார்.