
தட்டையான பாதையை விட மேடு, பள்ளமான வழிகள் சுவாரஸ்யமானவை. செய்திகளும் அப்படித்தான்! நிகழ்வுகளை மட்டுமே பதிவு செய்வதை விட அனுமானங்கள், புதிர்கள், ரகசியங்கள், நடந்துவிட வாய்ப்புள்ளவை, நடந்து வெளியே தெரியாதவை ஆகியவையும் செய்திகளே.
அப்படி பரபரப்பு மசாலா தூவப்பட்ட செய்திகள் இதோ உங்களுக்காக...
# மீனாட்சி கோயில், வட ஆரண்யேஸ்வரர் கோயில் என்று தமிழகத்தில் தொடர்ச்சியாக கோயில்களில் ஏற்படுகின்ற தீ விபத்தினால் ஆட்சிக்கு பாதகம் நேரலாம், கடும் வறட்சி உருவாகலாம், சில நேரங்களில் ஆட்சியாளர்களில் யாருடைய உயிருக்கும் கூட ஆபத்து உருவாகலாம் என்று தகவல் கிளம்பியுள்ளது.
# கவர்னர் அலுவலக பி.ஆர்.ஓ.வாக சென்றுள்ள செய்தித் துறை இணை இயக்குனர் சரவணன், தி.மு.க. ஆட்சியின் போது அழகிரிக்கு மிக நெருக்கமாக இருந்தவராம்.
# ஆறு அமைச்சர்களை மட்டும் நீக்கினால் இணைய தயார் எனும் ரேஞ்சில் தினகரனின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் கசிவதை அவரது முக்கிய ஆதரவாளர்களே ரசிக்கவில்லையாம்.
# எடப்பாடி தமிழக முதல்வராக பதவியேற்று வரும் 16-ம் தேதியுடன் ஓராண்டு முடிகிறது. ஆனால் அந்த விழாவை இரு நாட்கள் முன்னதாக 14-ம் தேதியே கொண்டாடிவிட முடிவு செய்திருக்கிறார்களாம்.
# சென்னைக்கு அருகிலுள்ள ஒரு மாவட்டத்தின் எஸ்.பி.யின் ஆசீர்வாதத்துடன் சென்னையை சேர்ந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் சூதாட்ட கிளப் ஒன்று சக்கபோடு போடுகிறதாம்.
# அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் காரை நிறுத்துவதற்கு தனி இடம் உள்ளது. இந்த இடத்தில் வேறு எந்த முக்கியஸ்தர் காரையும் நிறுத்த அனுமதியில்லையாம். ஆனால் 6-ம் தேதி அங்கு நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வந்த வைகோவின் கார் ஸ்டாலினின் கார் நிற்குமிடத்தில் நிறுத்தப்பட்டதாம். கேட்டதற்கு ‘தலைமையின் அனுமதியுடன்...’ என்று தகவல் வந்ததாம். வைகோவுக்கு ஸ்டாலின் தரும் முக்கியத்துவத்தை பார்த்து திகிலடித்துக் கிடக்கிறார்களாம் ஸ்டாலினின் நிழலாய் நிற்கும் தலைவர்கள்.
# வழக்கமான காலத்திற்கு முன்பாகவே பட்ஜெட்டை தாக்கல் செய்ய எடப்பாடி அரசு முனைவதை தடுக்கும் வகையில் கவர்னர் மத்திய அரசுக்கு ஒரு கடித எழுதியிருப்பதாக தகவல்.
# மக்களவை சபாநாயகருக்கு கொடுக்கப்படும் வசதிகளை, அந்தஸ்தை தனக்கும் கொடுக்க வேண்டுமென தம்பிதுரை தொடர்ந்து நச்சரிப்பதாக தகவல்.
# பழனிசாமி மற்றும் பன்னீர் அணிகளில் உள்ள சிலர் சசிகலா தரப்புடன் நட்பில் இருப்பதாக பிரதமர் அலுவலகத்துக்கே உளவுத்துறை தகவல் சென்றுள்ளதாம்.
# தமிழகத்தை பொறுத்தவரையில் ரெளடிகள் சில விஷயங்களுக்கு சங்கேத வார்த்தை எனப்படும் ‘கோட் வேர்டு’ வைத்துள்ளார்கள். விபூதி போடுவது என்றால் கொலை செய்வது, லெக் பீஸ் என்றால் காலை மட்டும் வெட்டுவது என்பது போல் ‘தடி’ என்றால் போலீஸ் என்று அர்த்தமாம்.