
ஆளுகின்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் ரவுடிகளை வளர்த்துவிடுகிறார்கள். சிக்கல் வரும்போது ரவுடிகளை என்கவுண்டர் செய்ய உத்தரவு பிறப்பிக்கிறார்கள் என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
சினிமா பாணியில் ரவுடி பினுவின் பிறந்தநாள் விழாவை ரவுடிகள் ஒன்றுகூடி சென்னையில் கொண்டாடினர். அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடினர். தகவலறிந்த போலீசார், அங்கு சென்று 76 ரவுடிகளை கைது செய்தனர். இதற்கு முன் இல்லாத அளவில் சினிமா பாணியில் அரங்கேறியுள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய ரவுடி பினுவை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாட்டில் அரிவாளை வைத்து கேக் வெட்டும் அளவுக்கு தமிழ்நாட்டில் கலாசாரம் கெட்டுவிட்டது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்தார்.
தமிழிசையின் கருத்து தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தமிழிசையின் கருத்தை ஏற்றுக்கொண்ட சீமான், தமிழ்நாட்டில் இருபெரும் கட்சிகளின் ஆட்சிகள் தான் ரவுடிகளை வளர்த்து விடுவது. காவல்துறையின் ஆதரவும் கட்சிகளின் ஆதரவுமில்லாமல் ரவுடியிசம் செய்ய முடியாது. ரவுடிகளை தனியாக உருவாவதில்லை.
ஆசிட் வீசுவதற்கு, பொதுக்கூட்டங்களில் கலவரம் செய்வதற்கு, பிற கட்சிகளின் கொடிமரங்களை வெட்டுவதற்கு, கள்ள ஓட்டு போடுவதற்கு என பல காரணங்களுக்காக ஆளுகின்ற கட்சிகள் தான் ரவுடிகளை உருவாக்கி விடுகின்றன. பின்னர் சிக்கல் வரும்போது ரவுடிகளை என்கவுண்டர் செய்யும்படி அவர்களே உத்தரவு பிறப்பிக்கின்றனர் என சீமான் குற்றம்சாட்டினார்.