
நடிகர் ரஜினிகாந்த் தான் தொடங்கும் புதிய கட்சி மற்றும் கொள்கைகள் குறித்து, வெகு விரைவில் அறிவிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலஹாசன் தனது புதிய கட்சியை வரும் 21 ஆம் தேதி அறிவிக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ரஜினிகாந்த் அறிவித்துவிடுவார் என தெரிகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிப்பு, ஜெயலலிதாவின் மரணம் போன்ற காரணங்களால் தமிழக அரசியலில் ஓர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசியலுக்கு வரமாட்டேன் என கூறிக் கொண்டிருந்த நடிகர் கமலஹாசன் திடீரென கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார்.
அதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசன, உறுப்பினர்கள் சேர்ப்பு என கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கியுள்ளனர். வரும் 21 ஆம் தேதி ராமேஸ்வரத்தில், மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடத்தில் கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு, தமிழக சுற்றுப்பயணத்தை கமல் தொடங்குகிறார்.
அதே நேரத்தில் நடிகர் ரஜிகாந்த்தும் வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தார். விரைவில் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதிய கட்சி மற்றும் கொள்கைகள் குறித்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நேற்று திடீரென ஆலோசனை நடத்தினார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில் கமல் கட்சி தொடங்குவதாக அறிவித்த பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு முன் தனது கட்சியின் பெயரை ரஜினி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வரும் 13 ஆம் தேதி மஹா சிவராத்திரி அல்லது 15 ஆம் தேதி மாசி அமாவாசை நாளில் கட்சியின் பெயர் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.