25 ஆண்டுகள்.. எல்லாம் ரெடியா.. மாநாடு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் முக்கிய அறிவிப்பு..!

By Raghupati R  |  First Published Oct 1, 2023, 10:15 PM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் மாநாடு தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் திசம்பர்-23 சனிக்கிழமையன்று திருச்சிராப்பள்ளியில் "வெல்லும் சனநாயகம்" என்னும் மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது. தேர்தலில் பங்கேற்பதைப் பத்தாண்டுகாலம் தவிர்த்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன் முதலாக 1999 மே மாதம் நடைப்பெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் அடியெடுத்து வைத்தது. 

நாடாளுமன்ற சனநாயக பாதையில் அத்தேர்தலின் மூலம் தனது அரசியல் பயணத்தை தொடங்கி தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதன்படி, 2024 மே திங்களில் நடைப்பெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் விடுதலைச் சிறுத்தைகளுக்கு வெள்ளிவிழா ஆண்டு ஆகும். தேர்தல் களத்தில் கால் நூற்றாண்டை எட்டியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போது தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வீறு நடைபோட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

கட்சி கட்டமைப்பு ரீதியாக தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமின்றி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பரந்துபட்ட அளவில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்கள் விடுதலைச் சிறுத்தைகளாய் அணித்திரளும் வகையில் எழுச்சிப்பெற்றுள்ளது.

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தைபெரியார், மாமேதை காரல்மார்க்ஸ் ஆகிய மாமனிதர்களின் கொள்கை வழியில், உழைக்கும் மக்களை அமைப்பாக்கி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சமத்துவத்தை வென்றெடுப்பதற்கான களத்தில் தீவிர முனைப்புடன் செயலாற்றி வருகிறது. 

குறிப்பாக சமூகத்தில் நிலவும் அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் அடிப்படைச் சிக்கலாக விளங்குகின்ற சனாதனம் என்னும் வேதநெறிச் கருத்தியலை அம்பலப்படுத்துவதிலும், அதற்கு எதிராக சனநாயக சக்திகளை அணித்திரட்டுவதிலும் கவனம் குவித்துப் போராடி வருகிறது. விடுதலைச் சிறுத்தைகளின் இந்த அறப்போராட்டம் சனாதனத்திற்கும் சனநாயகத்திற்கும் இடையிலான தொடர் போராட்டமாகும். 

சனநாயகமே சனாதனத்தை வீழ்த்தும் மாபெரும் வலிமை கொண்ட பேராயுதமாகும். அத்தகைய சனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டதே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் வகுத்தளிக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகும். சனநாயகம் இல்லையேல் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளான சமூகநீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றுக்கு இடம் இருக்காது. 

எனவே, சனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய வரலாற்று தேவை எழுந்துள்ளது. சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான நீண்டநெடிய அறப்போரில் தற்போது உழைக்கும் மக்கள் யாவரும் ஓர் அணியில் திரள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. அதன் அடிப்படையில் தேசிய அளவில் அதற்கான திரட்சி உருவாகியுள்ளது. 'இந்தியா கூட்டணி" என்னும் பெயரில் அது பேருரு கொண்டு எழுந்து நிற்கிறது.

விடுதலை சிறுத்தைகளின் திருச்சி மாநாடு: நடைபெறவுள்ள 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 'வெல்லும் இந்தியா வெல்லும் சனநாயகம்" என்னும் நம்பிக்கை மலர்ந்துள்ளது. இந்தியா கூட்டணியின் அதன் ஓர் அங்கமாக விளங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, வரும் திசம்பர் 23, சனிக்கிழமையன்று திருச்சிராப்பள்ளியில் வெல்லும் சனநாயகம் மாநாட்டை ஒருங்கிணைக்கிறது.

நாடாளுமன்ற சனநாயகப் பாதையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பயணிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவெய்துவதையொட்டி விடுதலைச் சிறுத்தைகளின் 'தேர்தல் அரசியல் வெள்ளி விழாவாகவும்" கட்சி தலைமையின் அகவை அறுபது மணி விழா நிறைவு விழாவாகவும் இம்மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

திருச்சி மாநாட்டில் யார் யார்?: இம்மாநாட்டில் மாண்புமிகு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், தமிழகத்தின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர். அத்துடன், காங்கிரஸ் பேரியக்கத்தின் அகில இந்திய தலைவர் திரு. மல்லிகார்ஜீனாகார்கே அவர்கள் பங்கேற்க உள்ளார்.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் திரு. து.ராஜா அவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் திரு.சீத்தாராம் யெச்சூரி அவர்களும் இம்மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர். இம்மாநாடு இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு அடித்தளமிடும் கால்கோள் விழாவாக அமையும்! இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ரயில் டிக்கெட் வாங்கினாலும் அபராதம் உண்டு.. இந்திய ரயில்வேயின் இந்த விதி தெரியுமா.? உஷார் மக்களே

click me!