திமுகவினரை சந்திக்க மத்திய குழு மறுப்பு..

First Published Dec 28, 2016, 11:20 AM IST
Highlights


கடந்த 12ம் தேதி வர்தா புயல் சென்னையில் கரை கடந்து சென்றது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்தன. லட்சக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள், ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள், நூற்றுக்கணக்கான கல்வீடுகள் சேதம் அடைந்தன. இதையடுத்து புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இதை தொடர்ந்து மத்திய குழு இன்று சென்னை வந்தது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய குழுவினரிடம் புயல் பாதிப்பு குறித்து விளக்கமளித்தார். பின்னர், பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அரசு சார்பில், மனு அளிக்கப்பட்டது. அப்போது, சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏக்கள் 13 பேர், அங்கு சென்றனர். அப்போது, அந்த கூட்டத்தில், திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர்களை மற்றொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த கூட்டத்துக்கு சென்ற திமுக எம்எல்ஏக்கள், தனித்தனியாக தங்களது தொகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் கூறி மனு கொடுத்தனர்.

பின்னர், ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 12ம் தேதி ஏற்பட்ட வர்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்து, உரிய நிவாரணம் பெற்று தரவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வைருக்கு மனு கொடுத்தார். மேலும், பாதிப்புகளை ஆய்வு செய்யவரும் மத்திய குழுவினர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.

இதைதொடர்ந்து மத்திய குழுவினர் இன்று சென்னை வந்ததாக அறிந்தோம். மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மத்திய குழுவை வழி நடத்தும் அலுவலரை நேரில் சந்தித்து, சென்னையில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் என்ற முறையில், எங்கள் தொகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த கோரிக்கை மனுவை கொடுக்க வந்தோம்.

முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மத்திய குழுவிடம் பேச்சு வார்த்தை நடத்தும்போது, நாங்களும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை கூறுவதற்காக சென்றோம். ஆனால், அங்கு திமுக உறுப்பினர்களை அனுமதிக்கவில்லை. மற்றொரு கூட்டம் நடப்பதாகவும், அதில் கலந்து கொள்ளும்படியும் கூறினர். அதன்படி நடந்த மற்றொரு கூட்டத்தில், மத்திய குழுவிடம் எங்களது கோரிக்கை மனுவை கொடுத்தோம்.

அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. ஆயிரக்கணக்கான தெரு விளக்கு மின் கம்பங்கள், உயர் அழுத்த மின் கம்பங்கள், நூற்றுக்கணக்கான டிரான்ஸ்பார்மர்கள் விழுந்தன. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிசை வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. கல் வீடுகளிலும் இடிந்தன. சிமென்ட் ஷீட் போட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. இவற்றை சீரமைத்து தரவேண்டும்.

சென்னை ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதிப்பில் இருக்கிறது. மேலும், மோசமான நிலைக்கு போகாமல், சென்னையில் பசுமையை கொண்டு வரவேண்டும், இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேர், தனித்தனியே மனு கொடுத்துள்ளோம்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, மக்களின் பிரதிநிதியாக, மத்திய குழுவினருடன், பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்தபோது, அதில் திமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டு வாய்ப்பு தரவேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், எங்களை சந்திக்க மறுத்ததோடு, வேறு இடத்தில் சந்தித்து மனு கொடுக்கும்படி திருப்பி அனுப்பிவிட்டனர். பின்னர், வேறு கூட்டத்தில் சந்தித்து மனு கொடுத்தோம். ஆனால், வாய் மொழியாக எதையும் கூற முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!