வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என்னால்தான் கிடைத்தது.. பாமகவை பொளந்துகட்டும் வன்னியர் கூட்டமைப்பு.

By Ezhilarasan BabuFirst Published Mar 4, 2021, 10:32 AM IST
Highlights

எனது சட்டப் போராட்டத்தின் விளைவாக கிடைத்த 10.5% வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு சிலர் உரிமை கோருவதும் தங்களது வெற்றியாக கொண்டாடுவதும் கண்டனத்திற்குரியது.  

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மேதகு ஆளுநர் அவர்களுக்கும் சட்டமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக வன்னியர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் சி.என் ராமமூர்த்தி கூறியுள்ளார். இந்த சட்டம் தான் நடத்திய சட்ட போராட்டத்தின் விளைவாக கிடைத்தது என்றும் ஆனால் சிலர் இச்சட்டத்திற்கு உரிமை கோருகின்றனர். அவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துகொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் மற்றும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. எனது சட்ட போராட்டத்திற்கு வழக்கு எண்14025/2010  மற்றும் அரசாணை எண்35/2012  மூலம் கிடைத்த மாபெரும் வெற்றி இது. வன்னியர் கூட்டமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.26-2-2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு 10.5% வழங்கும் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படும் பொழுது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அரசானை எண் 35 இன் படி தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் வன்னியர்கான உள்ஒதுக்கீடிற்கு 2012 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. 

அப்போதைய ஆணைய தலைவர் நீதியரசர் ஜனார்த்தனம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். உள் ஒதுக்கீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கு எண் 14025/2010  அரசாணை எண் 35 குறிப்பிடப்பட்டுள்ளது.2010ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு 15 சதவீத உள் ஒதுக்கீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். அந்த வழக்கின் தீர்ப்புரையின் அடிப்படையில் தமிழக அரசும், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை கேட்டு 21-3-2012 அன்று அரசானை எண் 35 பிறப்பித்தது.13- 6-2012 அன்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது பரிந்துரையை தமிழக அரசிற்கு சமர்ப்பித்தது. 

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை நடைமுறைப்படுத்தபடாததால் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். 1-4- 2015 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு 30 நாட்களுக்குள் இதனை தமிழக அரசு நிறைவேற்ற ஆணையிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசாணை வெளியிடாமல் காலம் தாழ்த்திய தமிழக அரசு, 26-2-2021 அன்று சட்ட முன்வடிவை தாக்கல் செய்து ஆளுநரின் ஒப்புதல் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது சட்டப் போராட்டத்தின் விளைவாக கிடைத்த 10.5% வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு சிலர் உரிமை கோருவதும் தங்களது வெற்றியாக கொண்டாடுவதும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!