பெண் ஊழியர்களை கருத்தில் கொண்டு தேர்தல் மையங்களை ஒதுக்க வேண்டும்.. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Mar 4, 2021, 10:04 AM IST
Highlights

ஆசிரியர்-அரசு ஊழியர்கள் 100% வாக்களிக்க தேர்தல் பணிபுரியும் இடத்திலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. 

ஆசிரியர்-அரசு ஊழியர்கள் 100% வாக்களிக்க தேர்தல் பணிபுரியும் இடத்திலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம். தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் ஜனநாயகக் கடமையாற்றக் காத்திருக்கின்றோம்.
தேர்தல்பணி சிறப்பாக நடைபெறும்வகையில் கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றி உதவிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன். 

ஆசிரியர்-அரசு ஊழியர்களின் வாக்குகள் நூறு சதவீதம் பதிவாகும் வகையில் பணிபுரியும் வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஆசிரியர்-அரசு ஊழியர்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிகள் கடந்தமுறை 100 கி.மீட்டருக்கும் அதிகம் தொலைவில் அமைத்ததால் பெண் ஊழியர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளானதால் வாக்குச்சாவடிகள் 10 கி.மீட்டருக்குள் பணியமர்த்திடவேண்டும்.
ஆசிரியர்-அரசு ஊழியர்கள் வாக்குப்பதிவு முன்நாள் மதியம் சென்று மறுநாள் இரவு வாக்கு எந்திரங்கள் அனுப்பிவைக்கும் வரை பணிமேற்கொள்வதால் தேர்தல் நாளன்றும் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்போதும் தேர்தல் ஆணையமே உணவு வழங்கிடவேண்டும். 

கொரோனா பெருந்தொற்றால் தனிமைப்படுத்தபட்டவர்களுக்கு தபால் வாக்கு வழங்கவேண்டும். வாக்குச்சாவடிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கவேண்டும். வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்கி பாதுகாப்பினை உறுதிசெய்யவேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் தேர்தல்பணி முடிந்ததும் இரண்டு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள விடுப்பு வழங்கவேண்டும். மேற்கண்டக் கோரிக்கையினை நிறைவேற்றி ஆசிரியர்-அரசு ஊழியர்கள் தடையின்றி ஜனநாயகக்கடமையாற்றிட ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!