இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மனம் இல்லாத ஸ்டாலின்.. தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- வானதி

By Ajmal Khan  |  First Published Apr 9, 2024, 1:47 PM IST

கோவில் சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டால், கோவில்களை அழித்து விடலாம். அதன் மூலம் இந்து மதத்தை அழித்து விடலாம் என்று நினைக்கும் இந்து விரோதிகளிடம் அதிகாரம் இருப்பதால் தான் இது போல நடக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்


இந்துக்களை ஏமாற்ற முயற்சி

இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத ஸ்டாலினை கண்டித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நாங்கள் அனைத்து மதத்தினரின் நலன்களையும் பாதுகாப்பவர்கள். கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் 1500-க்கும் அதிகமான இந்து கோவில்கள் சீரமைக்கப்பட்டு, குடமுழுக்குச் செய்யப்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் இறைநம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.  ஆன்மிகத்தை அரசியலுக்குப் பயன்படுத்தும் பாஜகவுக்கு இது எரிச்சலாக இருக்கிறது. அதனால்தான் திமுக மீது குற்றம்சாட்டுகிறார்கள்" என்று வழக்கம் போல இந்துக்களை ஏமாற்ற முயற்சித்துள்ளார்.

வழிபாட்டு சுதந்திரம் பறிப்பு

மதச்சார்பற்ற அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோவில்களை மட்டும், தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அந்த மதத்தினருக்கு செய்யும் அநீதி. இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும், பிடித்தமான மதத்தை,  பிடித்தமான கடவுளை வழிபடும் உரிமையை நமது அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கிறது. ஆனால், இந்து கோவில்களை மட்டும் மதச்சார்பற்ற அரசு நிர்வகிப்பதால், இந்துக்களின் வழிபாட்டு சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.  இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இது ஒருபக்கம் என்றால், மறுபக்கம், அதிக வருவாய் வரும் கோவில்களில் மட்டும்தான் திமுக அரசு கவனம் செலுத்துகிறது. வருமானம் இல்லாத ஆயிரக்கணக்கான கோவில்கள் பாழடைந்து கிடக்கின்றன.

கோவில் நிலங்கள் குறிவைக்கப்படுகிறது

ஆயிரம் ஆண்டுகள், பல நூறு ஆண்டுகள் பழமையான தொல்லியல் சிறப்புகள் வாய்ந்த கோவில்கள்கூட அழியும் நிலையில் இருக்கின்றன. அவற்றைப் பற்றி எல்லாம் கோவில்களை நிர்வகிக்கும் திமுக அரசு கவலைப்படுவதில்லை.  தமிழ்நாடு அரசுக்கு நிலம் தேவைப்பட்டால், இந்து கோவில் நிலங்கள்தான் குறிவைக்கப்படுகின்றன. 1500 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். கோவில் கும்பாபிஷேகங்கள் அனைத்தும் ஹிந்து மக்களின் நன்கொடையால் நடப்பவை. கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கூட பொதுமக்கள் அறநிலைத்துறையிடம் பல ஆண்டுகள் அனுமதி கேட்டு காத்திருக்கும் அவலம் பல இடங்களில் இருக்கிறது. கும்பாபிஷேகம் என்ற பெயரில் பல கோவில்களில் தொன்மையான சின்னங்கள் சிதைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் ஹிந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், கடைகள், கட்டுமானங்களின் வருமானத்தை சந்தை மதிப்பில் வசூலித்தால், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் சீரமைத்து ஆறு கால பூஜைகளை நடத்த முடியும். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு உண்டு உறைவிட பள்ளியை இலவசமாக நடத்த முடியும்.  

தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்

நாங்கள் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் அனைத்து மத பண்டிகைகளுக்கும் தவறாமல் வாழ்த்து கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் ஹிந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. அந்த அளவுக்கு ஹிந்து மதத்தின் மீது வெறுப்புணர்வு கொண்ட ஒருவர், அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கிறோம் என்று கூறுவது தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக நடத்தப்படும் நாடகம். இனியும் இந்த நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

நான் வளர்ந்தது போல நல்ல சூழலில் வளர்ந்திருந்தால் எனது தந்தை தப்பா போயிருக்க மாட்டார்- வீரப்பன் மகள் உருக்கம்

click me!