"நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும்" என்று அமைச்சர் உதயநிதி கூறியிருக்கிறார். இதிலிருந்து நீட் தேர்வை அரசியலாக்கி குளிர்காய நினைக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு- திமுக உண்ணாவிரதம்
திமுகவின் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை விமர்சித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை மீண்டும், தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது திமுக. மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், மருத்துவக் கல்வியின் தரம் குறைந்து விடக்கூடாது,
undefined
அதே நேரத்தில் திறமையான மாணவர்களின் மருத்துவர் கனவும் தகர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே, நீட் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. 2017 முதல் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வு நடந்து வருகிறது.
திமுகவின் அரசியல் நாடகம்
ஹிந்தி வெறுப்பு, திராவிட இனவாதம் போல, நீட் தேர்வையும் பிரித்தாளும் அரசியல் ஆயுதமாக திமுக பயன்படுத்தி வருகிறது. நீட் தேர்வுக்காக தமிழக அரசே பயிற்சி மையங்களை நடத்தி, அதற்கு பெரும் வெற்றி கிடைத்து வந்த நிலையில்தான், 2021-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. 2021சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான திரு. உதயநிதி, "தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்து முதல் கையெழுத்திடுவோம். அதற்கான ரகசியம் எனக்கு தெரியும்" என்றார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை, உச்ச நீதிமன்ற உத்தரவில்லாமல் ரத்து செய்ய முடியாது என்பது தெரிந்தும் பொய்யான வாக்குறுதி அளித்து திமுக ஆட்சிக்கு வந்தது. அதுமட்டுமல்ல ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு இருக்காது என திமுகவினர் பிரசாரம் செய்கின்றனர்.
இதனால், நீட் தேர்வு இருக்காது, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ் சேர்க்கை நடக்கும் என ஒரு பகுதி மாணவர்கள் நம்ப வைக்கப்படுகின்றனர். இன்னொரு பெரும் பகுதி மாணவர்கள் நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்ற குழப்ப மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் நீட் தேர்வை உறுதியுடன் எழுத முடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் தான் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு சில மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு சுமை என்பதை நான் மறுக்கவில்லை.
மாணவர்களை, மக்களை ஏமாற்றும் நாடகமா?
'இன்னும் சில மாதங்களில் நாங்கள் ஏற்படுத்த நினைக்கும் அரசியல் மாற்றம் நடக்கும் போது நீட் தடுப்புச் சுவர் பொலபொலவென உதிர்ந்து விழும் ' என முதலமைச்சர் திரு. ஸ்டாலின் கூறியிருக்கிறார். அப்படியெனில், 2021-ல் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது அரசியல் மாற்றம் இல்லையா? 2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வேண்டும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வேண்டும் என்பதெல்லாம் அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலினுக்கும், அவரது மகன் உதயநிதிக்கும் தெரியாதா? "திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம். அதன் ரகசியம் எனக்கு தெரியும்" என்று உதயநிதி சொன்னதெல்லாம் மாணவர்களை, மக்களை ஏமாற்றும் நாடகமா?
"நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும்" என்று அமைச்சர் உதயநிதி கூறியிருக்கிறார். இதிலிருந்து நீட் தேர்வை அரசியலாக்கி குளிர்காய நினைக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், மக்களை போராட்டத்திற்கு அழைப்பது, சமூக அமைதியை குலைக்கும் செயல். அமைச்சரே மக்களைத் தூண்டி விடுகிறார். இது கடும் கண்டனத்திற்குரியது. அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி, பாடத்திட்டங்களை காலத்திற்கேற்ப மாற்றி அமைத்து, பள்ளிகளிலேயே பயிற்சி அளித்தால் நம் மாணவர்கள் சாதிப்பார்கள். ஆனால், நீட் தேர்வு குறித்த அச்சத்தை விதைத்து கொண்டிருப்பதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அரசியல் நடத்த ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில், அரசியலுக்காக நாட்டின் சொத்தான மாணவர்களின் எதிர்காலத்தோடு, அவர்களின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்.
தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்
திமுக தொடங்கப்பட்டபோது அதாவது அக்கட்சியின் முதல் தலைமுறை இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது. இப்போது மூன்றாவது தலைமுறை நீட் எதிர்ப்பு போராட்டத்தை கையிலெடுத்துள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் மாணவர்களைத்தான் பழிகடா ஆக்கினர். இப்போதும் அதுதான் நடக்கிறது. ஆனால் இந்த முறை தமிழக மாணவர்களும், தமிழக மக்களும் ஏமாற மாட்டார்கள் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்