
எந்த நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக எடப்பாடி அணியைச் சேர்ந்தவரும் தமிழக அமைச்சருமான வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் அமைச்சர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், எந்தப்பிரச்சனை இருந்தாலும் அதனை பேசி தீர்த்துக் கொள்ளலாம். இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஆக்கப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்வோம். ஓ.பி.எஸ்.அணியினர் மாறி மாறி பேசி வருவது பேச்சுவார்த்தைக்கு முட்டுக் கட்டை போடும் வகையில் உள்ளது."
பேச்சுவார்த்தைக்காக எங்களை தொடர்பு கொள்ளுமாறு ஓ.பி.எஸ்.அணியில் உள்ள கே.பி.முனுசாமிக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம்.
சசிகலா குடும்பத்தை நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று ஓ.பி.எஸ். அணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எந்த நிபந்தனையும் இன்று பேச்சுவார்த்தைக்கு தயார் என்று எடப்பாடி டீம் அறிவித்துள்ளது. என்ன தான் அடுத்து நடக்கப் போகிறது?