
தமிழக அமைச்சர்களை வேறு யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக பன்னீர்செல்வம் ஆதரவாளரான கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான சமரச பேச்சுவாரத்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இதன்பின்னர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "அரசியல் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் கருத்து வேறுபாடு உள்ளது. ஜெயலலிதாவின் மர்ம மரணம் கோடிக் கணக்கான தமிழ் நெஞ்சங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா இயற்கையாக மரணிக்கவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆறாத்துயரத்துடன் மக்கள் உள்ளனர்."
"மக்களின் மனதில் இருக்கும் துயரத்தைப் போக்கவும், உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகவும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று பன்னீர் செல்வம் வலியுறுத்தி வருகிறார். சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்."
"அதிமுகவை கபளீகரம் செய்யக் கூடிய சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்தே வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். அதிமுக அம்மா அணி சார்பில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகக் கூறி அவர்களே குழு அமைத்தார்கள். அந்த குழுவில் இடம்பெற்றுள்ள சிலர் குழு அமைக்கப்படவில்லை என்கின்றனர்."
"பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் தனிப்பட்ட உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். அந்த கட்டுப்பாடின்றி ஒருசில தலைவர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களாக குழப்பமான பதிலையே அவர்கள் கூறி வருகின்றனர். இதனால் எடப்பாடி அணி தற்போது வரை குழம்பிப் போய் உள்ளதாக நினைக்கத் தோன்றுகிறது."
"ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.சசிகலா குடும்பம் கட்சியில் இரு்து வெளியேற்ற வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு விட்டால், முழு மனதோடு பேச்சுவார்த்தை நடத்த தயார். அமைச்சர்களை வேறு யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள்" இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார். "