
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் என் மடியில் விழுந்தது ஒரு கனி. அதனை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன் என அண்ணாவால் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்களைக் குறித்து, 1967 ஜனவரி 1 ஆம் நாள், சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாட்டின் நிறைவு நாள் பேருரையில், தமிழர்களின் சகாப்த நாயகன் என கூறினார்.
1971 பொதுத் தேர்தலில் சங்கரன்கோவிலில் எம்.ஜி.ஆர் நின்று கொண்டு, உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்ற முழக்கம் பிரச்சார வேனில் ஒலித்தபோது கையை உயர்த்தி அவரே முழங்குவது போன்ற தோற்றத்தில் வந்த காட்சியை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. அந்தத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைத் தி.மு.கழகம் பெற்றது.பேரறிஞர் அண்ணா அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு யார்? நாவலரா? கலைஞரா? யார் முதல்வர்? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்தபோது மக்கள் திலகம் தமது முழு ஆதரவையும் கலைஞருக்குத் தந்தார்.
1971 பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தி.மு.க. வேட்பாளருக்கும் கலைஞர் 30 ஆயிரம் ரூபாய் தேர்தல் நிதி கொடுத்ததை அறிந்த போதுதான் தி.மு.க.வின் பொருளாளரான எம்.ஜி.ஆர் அதிர்ச்சி அடைந்தார்.
1962, 1967 பொதுத் தேர்தல்களின் தி.முக.வின் பல வேட்பாளர்களுக்கு எம்.ஜி.ஆர் திரைத்துறையில் தான் சம்பாதித்த பணத்தை அள்ளிக் கொடுத்தார் என்ற உண்மையை மனச்சாட்சி உள்ள தி.மு.க.வினர் மனதளவில் ஒப்புக் கொள்வார்கள்.
1972ம் ஆண்டு தலைமைக் கழகத்திற்குச் சென்று பொருளாளர் என்ற முறையில் வரவு செலவுக் கணக்கைக் கேட்டபோது, அதற்குக் கிடைத்த பதில் எம்.ஜி.ஆருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, அக்டோபர் 8ம் நாள் லாயிட்ஸ் சாலையிலும், திருக்கழுக்குன்றத்திலும் தி.மு.க. மேடைகளில் பேசிய எம்.ஜி.ஆர் அமைச்சர்களை மட்டும் சொத்துக்கணக்குக் காட்டச்சொன்னால் தன்னைத் தவறாக நினைப்பார்கள் என்று கருதி, தி.மு.க.வினர் அனைவரும் சொத்துக் கணக்கைக் காட்டவேண்டும் என்று பேசினார்.
அக்டோபர் 10-ந்தேதியன்று எம்.ஜி.ஆரை ஏன் கட்சியை விட்டு நீக்கக் கூடாது என்பதற்கு இத்தனை நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தலைமைச் செயற்குழுவில் தீர்மானத்தை அறிவித்துவிட்டு, அந்தக் கெடு முடிவதற்கு உள்ளாகவே ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் பொதுக்குழுவைக் கூட்டி, எம்.ஜி.ஆரை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கி அறிவிப்பைச் செய்ய வைத்தார் கலைஞர்.
எம்.ஜி.ஆர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்கிறது என்று அக்டோபர் 10-ந்தேதி சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் எடுக்கப்பட்ட முடிவை வாசலில் காத்திருந்த என்னிடம் நாவலர் சொன்ன போது, என் இருதயம் நொறுங்கிப் போயிற்று.
நான் எம்.ஜி.ஆரின் ஆதரவாளன் அல்ல. கழகத்தின் தலைவர் அண்ணன் கலைஞரை உயிருக்கும் மேலாக நேசித்த உண்மைத் தொண்டன். ஆனால் தி.மு.க.வுக்குப் பெரும் பாதகம் விளையும் என்று அஞ்சினேன்.
ஆழிப்பேரலை போல் எம்.ஜி.ஆர் ஆதரவு அலை தமிழகமெங்கும் வீசியது. எம்.ஜி.ஆர் படத்தை ஒட்டாமல் எந்த வாகனமும் சாலைகளில் செல்ல முடியவில்லை. தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் தி.மு.க. பொதுக்கூட்டத்தை நடத்த முடியவில்லை.
நெல்லையில் நடத்தப்பட்ட தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கல்வீச்சும் கலவரமும் நடந்ததால் கூட்டம் பாதியிலேயே கலைந்தது என்று கேள்விப்பட்டு நெல்லைக்கு விரைந்து மாணவர் தி.மு.க. சார்பில் ஆயிரம் பேரைத் திரட்டிக் கொண்டு நடந்தே சென்று நகரின் அத்தனை வார்டுகளிலும் தி.மு.க. கொடி ஏற்றி தேரடித் திடலில் துரைமுருகன், வலம்புரிஜான், என்.வி.என். சோமு ஆகிய மூவரையும் உரையாற்ற வைத்தேன்.
1977 சட்டமன்றத் தேர்தலில் திருச்சிக்குத் தெற்கே நான் தேர்தல் வேலை பார்த்த சங்கரன்கோவில் தொகுதியில் மட்டும்தான் தி.மு.க. வெற்றி பெற்றது. என் உழைப்பைக் கலைஞர் அங்கீகரித்தார். நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராக ஆக்கினார்.
அந்தப் பதவியைக் கழகத்தின் உயர்விற்கும் கலைஞரின் புகழை உயர்த்துவதற்கும் பயன்படுத்தியதோடு கழகம் நடத்திய அத்தனைப் போராட்டங்களிலும் எம்.பி. என்கின்ற தலைக்கனம் இல்லாமல் சி வகுப்புக் கைதியாகவே தோழர்களோடு சிறையில் இருந்தேன்.
கலைஞரின் பக்தன் என்ற கண்மூடித்தனமான மனப்பாங்கால் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்தேன். கலைஞருக்காகவே தொண்டர் படையை உருவாக்கினேன். கலைஞர் மீது துரும்பு விழுவதற்கும் பொறுக்காமல், ராதாபுரத்தில் கலைஞர் மீது உளி வீசிய செபாஸ்டியனைப் பிடித்து நையப்புடைத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தேன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 9000 ரூபாய் வருமான வரம்பைத் திரும்பப் பெற்று, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தி, ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டை 68 சதவிகிதமாக தமிழ்நாட்டில் ஆக்கித் தந்த சமூக நீதியின் காவலர் ஆவார்.
தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழா எடுத்து, ஆண்டு முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாடியதோடு, பெரியாரின் தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழக அரசு ஏற்றதோடு, அதற்கான அரசு ஆணையும் பிறப்பித்து, எல்லையற்ற புகழைக் குவித்தவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் 1989 ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திய அமைதிப்படை இலங்கைத் தீவில் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை நிறுத்திக் கொண்டு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று முழக்கமிட்ட தி.மு.க. தலைமை, தேர்தலில் வெற்றி பெற்றுக் கலைஞர் முதல் அமைச்சரான பின்பு ஆலிவர் ரோடு இல்லத்தில் பேபி சுப்பிரமணியம் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளுடன் நாங்கள் முதல் அமைச்சர் கலைஞரைச் சந்தித்து இந்திய அரசு போர் நிறுத்தம் அறிவிக்க நீங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் கூறியபோது அவர் சொன்னபதில் எங்கள் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டது.
மரண வாயிலில் தான் இருந்தபோதும் ஈழத்தமிழர்களை, விடுதலைப்புலிகளைப் பாதுகாக்கத் துடித்த எம்.ஜி.ஆர் என்ற அந்த மூன்றெழுத்து மந்திரம், ஈழத்தமிழர்களின் இதயச்சுவரில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு விட்டது.
சுதந்திரத் தமிழ் ஈழம் ஒருநாள் மலரத்தான் போகிறது. யுகயுகாந்திரங்களுக்கும் தலைவர் பிரபாகரன் பெயரும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பெயரும் நிலைத்து நிற்கும்.
2017 ஜனவரி 17 மக்கள் திலகம் எம்.ஜிஆரின் நூற்றாண்டு விழா என்பதால், இதுநாள் வரை என் இதயத்தில் பூட்டி வைத்து இருந்த உணர்ச்சிகளை அறிக்கையாக வெளியிடுவதாக அதில் தெரிவித்துள்ளார்