ஆபத்தான மனிதராம் வைகோ: மனசாட்சியை பிடுங்கியெறிந்த மலேசியாவின் மமதை வர்ணனை...

First Published Jun 9, 2017, 1:46 PM IST
Highlights
Vaiko passport revoked and not allowed to enter Malaysia Added to the list of dangerous people by Malaysian govt


’துரு போர்த்திய ஈட்டியை எடுத்து என் இதயத்தின் நடுவில் பாய்ச்சியது போல் உணர்ந்தேன்.’ வேதனையின் விளிம்பில் தான் நின்ற தருணங்களை விளக்க வைகோ உதிர்க்கும் வார்த்தைகள் இவை. இப்போது கோலாலம்பூர் விமான நிலையத்தில் இமிக்ரேஷன் துறையின் விசாரணை அறையில் இரத்தம் வழியும் இதயத்துடந்தான் அமர்ந்திருக்கிறார் வைகோ. காரணம்? ’நாட்டிற்கு ஆபத்தான மனிதர்கள்’  பட்டியலில் அவரது பெயரையும் இணைத்து, தங்கள் நாட்டிற்குள் வர தடைவிதித்திருக்கிறது மலேசிய அரசு. 

எத்தனையோ முறை வைகோவின் இதயம் இப்படியான தாக்குதல்களை சந்தித்து தளர்ந்திருந்தாலும் கூட சர்வதேச அளவில் தமிழர்களுகளுக்கு சிறு துயரமென்றாலும் மீண்டும் துள்ளியெழுந்து பாய்ச்சல் காட்ட தயங்கியதில்லை. ஆனால் இன்றைய தாக்குதல் மிக மோசமானதாகதான் ம.தி.மு.க.வினரால் உணரப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் கதைக்கின்றன.


 
என்ன நடந்தது?...மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரான இராமசாமியின் மகள் திருமண வரவேற்பு ஜூன் 10_ம் தேதி சனிக்கிழமை மாலை பினாங்குவில் நடைபெற இருக்கிறது. இராமசாமி, வைகோவின் நெருங்கிய நண்பரென்பதால் வைகோவுக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். இவரும் சென்னையிலுள்ல மலேசிய தூதரகத்தில் முறையான விசா அனுமதியை கடந்த வாரமே பெற்றிருந்தார். 

நேற்று நள்ளிரவு 11:55 மணியளவில் தனது உதவியாளர் அருணகிரியுடன் சென்னையிலிருந்து மலேசியா கிளம்பினார். இன்று காலை கோலாலம்பூர் ஏர்போர்ட் சென்றடைந்த அவரிடம் இமிக்ரேஷன் துறை அதிகாரிகள் ‘நீங்கள் எங்கள் நாட்டுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. எனவே எங்களது குடிவரவு மேல் அதிகாரிகளை சந்தியுங்கள்.’ என்று கூறியிருக்கிறார்கள். 

அங்கு சென்று பேசியபோது ‘நீங்கள் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பை சார்ந்தவர். இலங்கையில் உங்கள் மீது பல வழக்குகள் உள்ளன.’ என்று கூறியிருக்கிறார்கள். உடனே வைகோ ‘நான் இந்திய குடிமகன்’ என்று சொல்லி தன் பாஸ்போர்ட் உள்ளிட்ட அத்தனை ஆவணங்களையும் காட்டியிருக்கிறார். ஆனால் அதை ஏற்க மறுத்த மலேசிய அதிகாரிகள் அவரிடம் விடுதலைப்புலிகள் பற்றிய பல கேள்விகளை கேட்டு குடைந்திருக்கின்றனர். 

அடிப்படையில் தேர்ந்த வழக்கறிஞருமான வைகோ அழுத்தமான ஆதாரங்களை எடுத்து வைத்து, தான் இந்திய குடிமகனே என்று வாதாடியபோது ‘இந்த நாட்டுக்கு ஆபத்தான நபர்கள் பட்டியலில் உங்களின் பெயரும் இருக்கிறது. உங்களை எங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது.’ என்று கடினமாக கூறியவர்கள் அவரது பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்களாம். 

இந்த தகவலை உடனே துணை முதல்வர் இராமசாமிக்கு வைகோ தெரிவிக்க அவர் அதிர்ந்திருக்கிறார். பின் முதல்வர் லிம் குவான் யங் அவர்களுக்கு தகவல் தந்திருக்கிறார். இருவரும் அதிகாரிகளிடம் பேசியபோது ‘துணைப்பிரதமர் அலுவல்கத்தில் இருந்தே எங்களுக்கு உத்தரவு வந்துவிட்டது. இவரை நாங்கள் அனுமதிக்க முடியாது.’  என்று சொல்லி முதல்வர்களின் வார்த்தையையே நிராகரித்துவிட்டனர் அதிகாரிகள். பின் குடிவரவு அலுவலகத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று அமரவைத்து. அங்கிருந்து எங்கேயும் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டனராம். வைகோவின் உதவியாளர் அருணகிரிக்கு மலேசிய குடியுரிமை உள்ளது.

எனவே அவர் உணவகத்திற்கு சென்று வைகோவுக்கு உணவு வாங்கி வரலாம் என்று சொன்னார்களாம். ஆனால் சாப்பிட மறுத்துவிட்ட வைகோ பட்டினியாகவே அங்கு அமர்ந்திருக்கிறார்.  இன்று இரவு 10:45 மணிக்கு சென்னை வந்து சேரும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வைகோவை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். 

இதற்கிடையில் துணை முதல்வர் இராமசாமி வைகோவிடம் ‘உங்களை அதிகாரிகள் ஏதேனும் துன்புறுத்தினார்களா?’ என்று கவலையோடு கேட்க, ‘அப்படியெல்லாம் இல்லை. ஆனால் யாரும் சந்திக்க முடியாத இடத்தில் உட்கார வைத்திருக்கின்றனர்.’ என்று வருத்தமாக கூறியிருக்கிறார். 

வைகோ இப்படி மலேசிய அனுமதி மறுக்கப்பட்டு கோலாலம்பூர் விமான நிலையத்தில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருப்பதும், அவரிடம் பல மணிநேரம் தொடர் விசாரணைகள் நடத்தப்பட்டிருப்பதும், விடுதலை புலிகளின் இயக்கத்தை சேர்ந்ந்தவர் என்று அவரை முத்திரை குத்தியிருப்பதும் சர்வதேச தமிழர்களிடையே தீயாக பரவி பதற்றத்தையும், கவலையையும் உருவாக்கி இருக்கிறது. 

இந்நிலையில் மலேசியாவினுள் நுழைய தனக்கு தடைவிதிக்கப்பட்டதையோ, விடுதலை புலிகளின் ஆதரவாளரான தன்னை அவ்வியக்கத்தை சேர்ந்தவர் என்றே முத்திரை குத்தி கேள்விகளால் துளைக்கப்படுவதையோ கூட வைகோ பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் ‘ஆபத்தான மனிதர்களின் பட்டியலில் உங்கள் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.’ என்கிற சொற்றொடர் அவரை நிச்சயமாகவே காயப்படுத்தியிருக்கிறது. 

உலக தமிழர்களுக்காக அதுவும் ஈழத்தமிழர்களுக்காக குடல் அதிர அதிர அடிவயிற்றிலிருந்து நியாயக்குரல் கொடுத்த மனிதருக்கு அண்டை நாட்டில் நிகழ்ந்திருக்கும் அவலத்தை சர்வதேச தமிழ் சமுதாயம் நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். 
அடக்கு முறைக்கும், கட்டுப்பாட்டுக்கும் அஞ்சியவரில்லை வைகோ.

பிரதமருடனான கூட்டணியையே முறித்துக் கொண்டு அவரை விமர்சித்தவர், இந்தியாவினுள் நுழைந்த ராஜபக்ஷேவை எதிர்த்து நடந்தே புரட்சி செய்தவர், துப்பாக்கி தோட்டா மழைகளுக்கு நடுவே ஈழம் சென்று தேசிய தலைவனை தரிசித்து வந்த நெஞ்சழுத்தக்காரர்.

ஆனால் சர்வதேச தமிழ் இன போராளியான தன்னை ‘ஆபத்தான நபர்’ என்று மலேசியா கட்டம் கட்டியதுதான் அவரது நெஞ்சை கலங்கடித்துவிட்டது. 

தமிழர்களுக்காக போராடுவதற்காக தமிழகம் அவருக்கு எத்தனையோ தோல்விகளை பரிசாக கொடுத்திருக்கிறது. ஆனால் மலேசியா அளித்திருக்கும் இந்த பட்டம் அதையெல்லாம் விஞ்சிவிட்டது என்பதே நிதர்சனம்.

click me!