
புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த 3 திமுக எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டையில் ரூ.231 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இந்த கல்லூரி மற்றும் மருத்துவமனை 11 மாத காலத்தில் கட்டி முடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
1,40,945 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இந்த 4 மாடி கட்டிடத்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான 8 துறைகள் அமையப்பெற்றுள்ளது.
ஒவ்வொரு துறையிலும் பேராசிரியர்களுக்கான அறைகள் 2 செயல் விளக்க கூடங்கள், விரிவுரைக் கூடங்கள், ஆராய்ச்சியகம், அருங்காட்சியகம், நூலகம் ஆகியவை அமைந்துள்ளது.
மருத்துவ கல்வி பயிற்றுவிப்பதற்காக உடல் தானம் செய்வதற்கு உடற்கூறியல் துறையில் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. அனைத்து துறைகளுக்கும் தேவையான உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கட்டிடத்தில் ஒரு பொதுவான விரிவுரைக்கூடம் மற்றும் கலந்துரைக் கூடம் அமைந்துள்ளது.
புற நோயாளிகள் பிரிவு, பிரேத பரிசோதனை அறை என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமை நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த திமுக எம்.எல்.ஏக்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவமெய்ய நாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
முதலமைச்சர் பழனிசாமியிடம் வாக்குவாதம் செய்ய வந்ததாக புகார் வந்ததையடுத்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து விழாவில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் போனில் அழைப்பு விடுத்ததாகவும் அதனாலையே இங்கு வந்தோம் எனவும் திமுக எம்.எல்.ஏ ரகுபதி தெரிவித்துள்ளார்.
விழாவில் கலந்து கொள்ள வந்த எங்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்துள்ளதாகவும் திமுகவிற்கு நல்லபெயர் கிடைத்து விடக்கூடாது என எங்களை கைது செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.