மதிமுகவில் உள்ள 99.9% பேருக்கு திமுகவோடு கட்சியை இணைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தமிழ்நாடு முழுவதும் இந்த உணர்வு தான் உள்ளது. துரைசாமி அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளராக நான் அலட்சியப்படுத்துவதாக வைகோ தெரிவித்துள்ளார்
மதிமுக உட்கட்சி மோதல்
மதிமுக தலைமை நிலைய செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டதில் இருந்து மதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி வெளியிட்ட கடிதத்தில், மதிமுக துவக்கப்பட்ட காலத்தில் தாங்கள் வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளை கேட்டே இலட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும், உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர். ஆனால் தங்கள் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களை ஆதரித்த திமுகவில் பிரிந்துவந்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும், தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி திமுகவிற்கே சென்று விட்டனர்.
திமுகவோடு மதிமுக இணைப்பு
கடந்த இரண்டு ஆண்டுகளாக மதிமுகவில் நடைபெறும் சம்பவங்களால் வெட்கப்படவும், வேதனைப்படவும் வேண்டியுள்ளது இன்று கழகத்தின் கள நிலவர செல்வாக்கு முற்றிலும் சரிந்த நிலையில் துரை வைகோவிற்கு நாடாளுமன்ற தேர்தலில் சீட் ஒதுக்கும் படி தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தெரிவித்துள்ளார். எனவே மதிமுகவை திமுகவோடு இணைக்க வேண்டும் என திருப்பூர் துரைசாமி தெரிவித்திருந்தார். இதனையடுத்து திருப்பூர் துரைசாமிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். அதில், மதிமுக முக்கிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. விரைவில் பொதுக்குழு நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 70 சதவீதம் மதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. எந்த இடத்திலும் சிறு சலசலப்பும் இல்லை. இந்தநிலையில் கட்சிக்குள் குழப்பம் இருப்பது போல் இல்லாத செய்தியை செய்தியாக்க சிலர் முயற்சித்தார்கள். முயற்சி தோல்வி அடைந்து விட்டது.
துரைசாமி கோரிக்கையை நிராகரித்த வைகோ
எனவே இந்த சூழ்நிலையில் மதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு முன்பை விட வேகமாக செல்ல நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு கட்சிக்கு வராமல் தற்போது திருப்பூர் துரைசாமி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் என்றால் நல்ல நோக்கத்திலா இருக்கும் என கேள்வி எழுப்பினார். கட்சியில் 99.9% பேருக்கு திமுகவோடு கட்சியை இணைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தமிழ்நாடு முழுவதும் இந்த உணர்வு தான் உள்ளது. துரைசாமி அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளராக நான் அலட்சியப்படுத்துகிறேன். மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம். நிராகரிக்கிறோம். இனிமேல் அவரின் பேச்சுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் என வைகோ உறுதிபட தெரித்தார்.
இதையும் படியுங்கள்
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு..? நிர்வாகிகளுக்கு திமுக தலைமை புதிய உத்தரவு