அவசர தேவை.. உரிய நேரத்தில் உரம் வழங்குங்கள். மத்திய அரசுக்கு அமைச்சர் MRKபன்னீர் செல்வம் கடிதம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 30, 2021, 2:49 PM IST
Highlights

தமிழ்நாட்டில் 25.40 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும் அடி உரம், மேலும் மேலுரமிட யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டிற்கு உர ஒதுக்கீட்டின் படி உரிய நேரத்தில் உரங்களை வழங்குமாறு வலியுறுத்தி மத்திய அரசின் மாண்புமிகு ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழக வேளாண் மற்றும் ஊரக நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உரிய நேரத்தில் யூரியா மற்றும் டிஏபி உரங்களை உர வழங்கல் திட்டத்தின் படி முழுமையாக வழங்கவும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உரங்களை தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள துறைமுகத்திலும் வந்தடைய ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் நல்ல மழை பொழிவு பதிவானதால் உரிய நேரத்தில் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டதால், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்  செயல்படுத்தியதன் காரணமாக நடப்பாண்டில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவை காட்டிலும், அதிகமாக 4.90 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில், ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.மேலும் தென் தமிழ்நாட்டில், தென்மேற்கு பருவமழை நல்லமுறையில் பெய்ததால் அனைத்து அணைகளும் நிரம்பி, பல ஆண்டுகளுக்குப் பின்னர் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக, மாநிலத்தில் கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களில் தமிழ்நாட்டில் நெல்  பயிரில் 10.00 லட்சம் ஏக்கர்  பரப்பளவிற்கு மேலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் 2.72 லட்சம் ஏக்கரில் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நாளது வரை அனைத்து பயிர்களின் சாகுபடி 25.40 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு ஏப்ரல் 2011 முதல் ஆகஸ்ட் 2011 வரை யூரியா உரம் 3.838  லட்சம் மெட்ரிக் டன் ஒதுக்கீடு ஒன்றி அரசு செய்துள்ள போதிலும், யூரியா 2.56 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே உர நிறுவனங்களால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன.

உரம் வழங்கியதில் 1.278  லட்சம் மெட்ரிக் டன் குறைவு காணப்பட்டது. மேலும் இதே மாதங்களில் டிஏபி உரம் 1.20 லட்சம் மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 87,000  மெட்ரிக் டன் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. டிஏபி உரம் வழங்குதலில் 33,000  மெட்ரிக் டன் குறைவு நிலவியது. தமிழ்நாட்டில் 25.40 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும் அடி உரம், மேலும் மேலுரமிட யூரியா மற்றும் டிஏபி உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆகையால், உரம் வழங்குவதில் குறைவு நிலவினால், பயிர் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வருமானம் பெருமளவில் குறைய வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே உரிய நேரத்தில் யூரியா மற்றும் டிஏபி உரங்கள் வழங்குதல் திட்டத்தின்படி முழுமையாக வழங்கவும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உரங்களை தமிழ்நாட்டிலுள்ள  துறைமுகங்களிலும் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள துறைமுகத்திலும் வந்தடைய ஏற்பாடு செய்து தரும்படி தமிழ்நாடு அரசின் மாண்புமிகு வேளாண்மை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அவர்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!