நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்... கருணாநிதியின் எந்த ரூட்டைத் தேர்வு செய்வார் முதல்வர் மு.க. ஸ்டாலின்..?

By Asianet TamilFirst Published Oct 29, 2021, 7:42 PM IST
Highlights

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக அதிக இடங்களைப் பிடித்ததால், தங்கள் பாதுகாப்புக்காக 2006-இல் கருணாநிதி எடுத்த முடிவை ஜெயலலிதாவும் எடுத்தார்.
 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் 1996-ஆம் ஆண்டின்படி நேரடியாக நடக்குமா அல்லது 2006-ஆம் ஆண்டின்படி மறைமுகமாக நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு வழியாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இன்னும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்தான் பாக்கி. அந்தத் தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடித்துவிடுவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாக வேண்டும்.  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்ந்த போட்டிகளில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி, மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளை வார்டு கவுன்சிலர்கள் (மறைமுகத் தேர்தல்) மூலம் தேர்ந்தெடுக்கும் முறை நடைமுறையில் இருந்தது.

ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேயர், நகராட்சித்  தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுப்பதா அல்லது வார்டு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுப்பதா என்ற பட்டிமன்றம் தமிழக அரசில் ஓயவில்லை. இதுதொடர்பாக தமிழக நகர்ப்புற வளர்த் துறை அமைச்சர் கே.என். நேரு சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இறுதியாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர் நேரு ஆலோசனை நடத்திய பிறகுதான், தேர்தலை எப்படி நடத்துவது என்பது முடிவு செய்யப்படும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகிவிட்ட நிலையில், இந்த அறிவிப்புக்காகத்தான் ஆணையமும் காத்துக்கொண்டிருக்கிறது. பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமலுக்கு வந்த பிறகு நடைபெற்ற முதல் உள்ளாட்சித் தேர்தல் 1996-ஆம் ஆண்டில் நடைபெற்றது. இத்தேர்தலில் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். 2001-ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியிலும் இதுவே பின்பற்றப்பட்டது. ஆனால், 2006-ஆம் ஆண்டில் இந்த முறையை மாற்றி, கவுன்சிலர்கள் மூலம் மேயர், நகராட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை கருணாநிதி அரசு அறிமுகப்படுத்தியது.

2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் பாதிக்குப் பாதி இடங்களை அதிமுக கைப்பற்றியதாலும், தேமுதிக வாக்கு வங்கியில் ஓட்டையைப் போட்டதாலும் இந்த முறைக்கு திமுக அரசு மாறியது. ஆனால், 2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் பழையபடி மக்களே மேயர், நகராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டு வந்தார். ஆனால், ஜெயலலிதாவும் 2016-ஆம் ஆண்டில் இப்பதவிகளை மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கும்படி சட்டத்தை மாற்றினார். அதாவது, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக அதிக இடங்களைப் பிடித்ததால், தங்கள் பாதுகாப்புக்காக 2006-இல் கருணாநிதி எடுத்த முடிவை ஜெயலலிதாவும் எடுத்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அரசு முதலில் மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளை நேரடியாக தேர்ந்தெடுக்கும்படியும் பிறகு 2019-இல் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கும்படியும் சட்டத்தை இரு முறை மாற்றியது. தற்போது அந்த நடைமுறைதான் அமலில் உள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றியைப் பெறவில்லை. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. குறிப்பாக மேற்கு மாவட்டங்கள் திமுகவுக்கு காலை வாரின. எனவே, 2006-ஆம் ஆண்டில் கருணாநிதி எடுத்த முடிவுப்படி தேர்தலை நடத்துவதா அல்லது 1996-இல் எடுத்த முடிவுப்படி  நடத்துவதா என்ற குழப்பத்தில் திமுக அரசு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மூத்த அமைச்சர்களுடனும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தியே முடிவெடுப்பார் என்று திமுக வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. இதில் இறுதி முடிவு எடுத்துவிட்டால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும்.!
 

click me!