கீழடியில் 7ம் கட்ட அகழாய்வுப் பணிகள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு!!

By Narendran SFirst Published Oct 29, 2021, 5:55 PM IST
Highlights

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 7 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. அதேபோல் கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில் முதல் 3 கட்ட அகழாய்வுப் பணிகளை மத்தியத் தொல்லியல் துறையும், 4 முதல் 7 கட்ட அகழாய்வுப் பணிகளைத் தமிழகத் தொல்லியல் துறையும் மேற்கொண்டன. இதில் கீழடியில் செங்கல் கட்டுமானங்கள், உறை கிணறுகள், பாசி மணிகள், தங்க ஆபரணங்கள், வெள்ளிக் காசு, தாயக்கட்டை, சுடுமண் பொம்மைகள், முத்திரைகள், எடைக்கற்கள் எனப் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.  இதன் மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரியவந்தது. 7 ஆம் கட்ட அகழாய்வுப் பணி செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மேலும் இங்கு கண்டறியப்பட்ட தொல் பொருட்களைப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில், கொந்தகையில் ரூ.12.21 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.  

பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பங்கேற்கிறார். அதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்றடைந்தார். அங்கிருந்து சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் அகழாய்வு நடைபெறும் இடத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெறும் அகழாய்வு  பணிகளை ஆய்வு செய்தார். கீழடியில் தமிழக அரசு சார்பில் தற்போது 7வது கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றனர். ஆதி தமிழரின் வைகை நதிக் கரை நாகரிகத்தை பறைசாற்றும் சான்றுகள் குவியல் குவியலாக கீழடியில் கிடைத்து வருகின்றன. இந்த பொருட்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகள் குறித்தும் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  அதைத் தொடர்ந்து முதல்வர் மு,.க.ஸ்டாலினுக்கு சுற்றுலா மற்றும் தொல்லியல் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், அகழாய்வு குறித்து விளக்கினார்.

அப்போது அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மூர்த்தி, கீதா ஜீவன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், முதல்வரின் தனிச்செயலர் செயலர் உதயச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன், எம்எல்ஏக்கள் தமிழரசி, மாங்குடி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த நிலையில் இன்று இரவு மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை காலை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் காலை 9 மணிக்கு தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

click me!