ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள்… புள்ளி விவரத்துடன் விளக்கமளிக்கும் திராவிடத் தலைவர்கள்!!

By Narendran SFirst Published Oct 29, 2021, 6:32 PM IST
Highlights

ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள் என திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதே கருத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் தெரிவித்துள்ளார்.

ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள் என திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில மறுசீரமைப்புக் குழுவின் அறிக்கையின்படி அன்றைய இந்திய ஒன்றிய அரசு , 1956 நவம்பர் 1 ஆம் நாள் , இந்தியாவைப் பல்வேறு மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது என்றுன் அதன் அடிப்படையில் முந்தைய தமிழ்நாடு அரசு, நவம்பர் 1 ஆம் தேதியைத் தமிழ்நாடு நாள் என்று அறிவித்ததாகவும் அந்த அறிவிப்பை இன்று புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழ்நாடு அரசு மறு ஆய்வு செய்திட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் உருவாக்கப்பட்ட மொழிவாரி மாநில அமைப்பை நாம் ஏற்கின்றோம், அது சரியான முடிவே என்று குறிப்பிட்டுள்ள அவர், எனினும் அந்த நாளில் தமிழ்நாடு பெற்றதை விட இழந்ததே மிகுதி என தெரிவித்துள்ளார். பழைய சென்னைத் தலைமாகாணம் இன்றுள்ள தமிழ்நாட்டை விட மிகவும் விரிந்து பரந்தது என்றும் இன்று கேரளா , ஆந்திரா , கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல பகுதிகள் அன்று சென்னைத் தலைமாகாணத்தில் இருந்தன என்றும் சுட்டிக்காட்டிய சுப.வீரபாண்டியன், இன்றைய ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தின் ஒரு பகுதி கூட அன்று நம்முடன் இருந்ததாகவும் எல்லைகள் பிரிக்கப்பட்டபோது நம் மண்ணின் பல பகுதிகளை அண்டை மாநிலங்களிடம் நாம் இழந்துவிட்டோம் என்றும் எனவே அந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை என்பதே உண்மை என்றும் வேதனை தெரிவித்தார்.

அந்த நாளில் எல்லைப் போராட்டத் தியாகிகளை நாம் நினைவுகூர்ந்து பாராட்டலாம் அவ்வளவு தான் என்று கூறிய சுப.வீரபாண்டியன்,  அப்படியானால் தமிழ்நாடு நாள் என்னும் பெயரும் , கொண்டாட்டமும் எந்த நாளுக்குப் பொருந்தும்? தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தந்தை பெரியார் 1955 அக்டோபர் மாதம் கோரிக்கை விடுத்தார். அதே கோரிக்கையை முன்வைத்து , தியாகி சங்கரலிங்கனார் பட்டினிப் போர் நடத்தி 1956 அக்டோபரில் உயிர் துறந்தார். பெயர் மாற்றத்தை வலியுறுத்தி , தமிழ்நாடு சட்டமன்றத்தில் , திராவிட முன்னேற்றக் கழகமும் வேறு சில கட்சிகளும் பலமுறை தீர்மானங்களை முன்மொழிந்தன . பிறகு நாடாளுமன்றத்தில் , பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் குப்தா அதே தீர்மானத்தைக் கொண்டுவந்தபோது , அறிஞர் அண்ணா அதனை மகிழ்ந்து வரவேற்று மாநிலங்களவையில் உரையாற்றினார். இறுதியாக , திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்பு , 1967 ஜூலை 18 அன்று , முதலமைச்சர் அறிஞர் அண்ணா முன்மொழிய அத்தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது என்பதை தெரிவித்தார். பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்ட வடிவத்தையும் பெற்றது எனவே தமிழ்நாடு நாள் என்ற பெயரில் நாம் கொண்டாட வேண்டிய நாள் ஜூலை 18 தான் என்று தெரிவித்துள்ளார் சுப.வீரபாண்டியன். மேலும் தாய்க்குத் தலைமகன் பெயர் சூட்டிய திருநாள் அதுதான் திராவிட இயக்கம் , தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டிப் பெருமையடைய வைத்த நாள் அதுதான், எனவே இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 ஆம் நாளைத் தமிழ்நாடு நாள் என்று தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும் என்று தனது அறிக்கை வாயிலாக சுப.வீரபாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதே கருத்தைதான் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது அறிக்கையில், நவம்பர் 1 ஆம் தேதி என்பது சென்னை மாநிலத்திலிருந்து சில பகுதிகள் பிரிந்து சென்ற நாள் என்றும் 1967 ஆன் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதிதான் தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்பட்ட நாள் என்றும் தெரிவித்துள்ளார். ஆகவே ஜூலை 18-ஐ தான் தமிழ்நாடு அரசு, அரசு ரீதியாகக் கொண்டாட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

click me!