தமிழகத்தில் பேரெழுச்சி.. 75 சதவீத வாக்குகள் பதிவாகும் என பொன். ராதாகிருஷ்ணன் கணிப்பு..

By Ezhilarasan BabuFirst Published Apr 6, 2021, 2:51 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது கன்னியாகுமரி மாவட்டத்திலும் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இதே  எழுச்சி தொடர்ந்தால் 75 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகும் என்று கூறினார்.  

தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பொது மக்களிடையே எழுச்சி காண முடிகிறது. இதே ஆர்வம் தொடர்ந்தால் 75 சதவீத வாக்குப் பதிவு ஏற்படுமென கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் இன்று காலை முதலே தன்னெழுச்சிக் கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு செலுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் திரைப் பிரபலங்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் மக்களுடன் மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி 39. 64 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் மொத்தம் 75 சதவீதம் அளவிற்கு வாக்குப்பதிவு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்தித்துவருகிறது. அதிமுக கூட்டணியில் மொத்தம் 20 இடங்களில் பாஜக போட்டியிடுகிறது.  அதேபோல கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணன் 8 வது முறையாக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மறைந்த எச்.வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜயகுமார் என்ற விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள்  நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவில் எஸ்.எல்.பி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கியூவில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது கன்னியாகுமரி மாவட்டத்திலும் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இதே  எழுச்சி தொடர்ந்தால் 75 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகும் என்று கூறினார்.  

 

click me!