MK Stalin : சேலம் இனி திமுகவின் கையில்... முதல்வரின் பிளான் பலிக்குமா ? கொங்கு மண்டல பாலிடிக்ஸ்

By Raghupati R  |  First Published Dec 22, 2021, 6:55 AM IST

சேலம் மாநகராட்சியை ஆளுங்கட்சியான திமுக கைப்பற்ற போகிறதா ? இல்லை எதிர்க்கட்சியான அதிமுக  கைப்பற்ற போகிறதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.


சேலம் சீலநாயக்கன்பட்டி யில் இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழா நடைபெற்றது "நமக்கு நாமே திட்டம்" மற்றும் "நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்" ஆகிய புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, 38 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 54 கோடியே 1 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 30,837 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 168 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tap to resize

Latest Videos

‘திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு செல்வது மட்டுமல்லாமல் திட்டங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்றும் திட்டங்களை மீண்டும் தொடங்கி வைப்பதற்காக தான் அடிக்கடி மீண்டும் சேலத்திற்கு வருவேன்’ என்று கூறி கொங்கு மண்டல பாலிடிக்ஸை கையில் எடுத்தார் முதல்வர். வீரபாண்டி ஆறுமுகம் உயிருடன் இருந்தவரை சேலம் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக தக்க வைத்து வந்த நிலையில் அவரது மறைவுக்கு பிறகு நிலைமை மாறத்தொடங்கியது. 

கோஷ்டிப்பூசல் நாளுக்கு நாள் தலைதூக்கத் தொடங்கிய பிறகு சேலத்தில் திமுக மெல்ல அஸ்தமனமானது. திமுகவின் கோஷ்டிப்பூசல் அரசியலை சரியாக பயன்படுத்திக்கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சேலம் மாவட்டச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அசுர வேகத்தில் அங்கு வளர்த்து வைத்திருக்கிறார். இதன் எதிரொலியாக தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. 

ஒரே ஒரு தொகுதியில் மட்டும் திமுக வெற்றிபெற்றது. சேலம் மாவட்டத்தில் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வியை முதலமைச்சர் ஸ்டாலினால் இன்னுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தான் வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சியை கைபற்றும் நோக்கில் கே.என்.நேருவை அங்கு களத்தில் இறக்கியுள்ளார். கடந்த வாரத்திற்கு முன்பு சேலத்தில் நடைபெற்ற முதல்வர் பங்கேற்ற நலத்திட்ட விழாவும் தேர்தலுக்கு முன்னோட்டம்தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தமிழகத்தின் மற்ற மாநகராட்சிகளில் எப்படியோ, ஆனால் கோவை மற்றும் சேலம் மாநகராட்சியில் ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு தோற்கக்கூடாது என ஸ்டாலின் மிக உறுதியாக இருக்கிறாராம். 

இதனால் இந்த இரண்டு மாநகராட்சிகளிலும் வலிமையான வேட்பாளரை மேயர் பதவிக்கு நிறுத்த தேர்வுப்படலம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ஆளுங்கட்சி யாரை நிறுத்தினாலும் சரி, சேலம் மேயர் பதவியை நாம் தான் கைப்பற்றுவோம் என ஆலோசனைக் கூட்டங்களில் நம்பிக்கை தெரிவித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்கியது போல், இப்போது சேலத்தில் இருந்தே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தை முதல் ஆளாக அவர் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆக மொத்தம் சேலம் மாநகராட்சியை கைப்பற்ற முன்னாள் முதல்வரும், இன்னாள் முதல்வரும் பயங்கர போட்டி போடுவதால் சுவாரஷ்யத்துக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள்.

click me!