சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார். அப்போது அவர் சனாதம் தொடர்பாக பேசினார். கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து உதயநிதியின் கருத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் உதயநிதிக்கு எதிராக கருத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
பதிலடி கொடுத்த உதயநிதி
இதற்கு பதில் அளித்த உதயநிதி, த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டதாக தெரிவித்திருந்தார்.
நாக்கை பிடுங்குவோம்
இந்தநிலையில் சனதனத்திற்கு எதிராக யார் பேசினாலும் அவர்களின் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்