சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே. ஆனால் பாஜகவினர் நான் கூறியதை திரித்துப் பேசுகின்றனர். இந்தியா கூட்டணி வலுப்பெறுவதை திசை திருப்பவே பாஜகவினர் சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று முன்தினம் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி பேசுகையில், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். சனாதனம், சமத்துவத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாற்ற முடியாதது என்றும் சொல்லலாம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எதையும் கேள்வி கேட்க வேண்டும் என உருவானது தான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் என தெரிவித்திருந்தார்.
எதிர்ப்பு தெரிவித்த அமித்ஷா
இதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் உதயநிதி மீது டெல்லி காவல்நிலையத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜகவின் எதிர்ப்புகளை பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி, ஒட்டுமொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் முன்பே சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது தான். பா.ஜ.க.வினர் நான் பேசியதை திரித்து பேசி வருகின்றனர். இந்தியா கூட்டணி வலுப்பெற்று வருவதை திசை திருப்புவதற்காக தான் பாா.ஜ.க.வினர் சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளதாக விமர்சித்தார்.
வழக்குகளை சந்திக்க தயார்
எல்லோருக்கும், எல்லாமே கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். பல ஆண்டுகளுக்கு முன் பெண்கள் படிக்கக்கூடாது என்று கூறினார்கள், பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று கூறினார்கள், கோயில்களுக்குள் செல்லக்கூடாது என்றார்கள். இந்த மூன்றையும் நாம் மாற்றி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல் என குறிப்பிட்டார். நாம் நம் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காக, யோசித்து திட்டங்களைக் கொண்டு வருகிறோம்.
ஆனால், பாசிஸ்ட்கள் நம் குழந்தைகளைப் படிக்க விடாமல் செய்வதற்கு என்ன வழி என யோசித்து அதற்கான திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். ஆனால் எதுவும் மாறக்கூடாது, எல்லாமே நிலையானது என்பதே சனாதனம் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். இனிமேலும் அப்படித்தான் பேசுவேன்.எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று உதயநிதி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
சனாதன தர்மத்தை அவமதிக்கும் இந்தியா கூட்டணி: அமித் ஷா!