
வரும் டிசம்பர் 21 தமிழகத்துக்கு மிக முக்கியமான நாள். தேசிய அரசியலே கவனிக்கும் நாளாக இது மாறியிருக்கிறது என்றும் சொல்லலாம்!
காரணங்கள் இரண்டு:
காரணம் ஒன்று! அ.தி.மு.க.வின் முகமான ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் கட்சிக்குள் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய குழப்ப நிலையுடன் அக்கழகம் முதல் தேர்தலை சந்திக்கிறது. ஆம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாள் அது.
காரணம் இரண்டு: கடந்த ஆறேழு வருடங்களாக தி.மு.க.வை எதிர்மறை விமர்சனத்தின் உச்சியில் வைத்திருக்கும் 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளி வரும் நாள்.
ஆக இவ்விரண்டு சம்பவங்களும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பதால் 2017 டிசம்பர் 21 தேசத்தையே தமிழகத்தை நோக்கி திரும்ப வைத்திருக்கும் முக்கிய நாளாக அமைந்திருக்கிறது.
இடைத்தேர்தலை பொறுத்தவரையில் ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்பது இங்கே எழுதப்படாத விதி. அரசு இயந்திரத்தை தன் கையில் வைத்திருக்கும் ஆளுங்கட்சி முழு செல்வாக்குடன் அத்தனை விதமான உபகரணங்களையும் அங்கே பிரயோகித்து வெற்றியடையும் என்பார்கள். ஆனால் அதையும் தாண்டி ஜெயலலிதா மறைந்துவிட்ட சூழ்நிலை, பன்னீரின் சகாவான மதுசூதனன் அங்கே நிற்பதால் அவரை கவிழ்த்த துடிக்கும் எதிரணி என்று அ.தி.மு.கவுக்கு இங்கே அக்னி பரீட்சைதான்.
அதேபோல் 2ஜி வழக்கில் 10:30 மணிக்கு வரும் தீர்ப்பு தி.மு.க.வுக்கு சாதகமாக வந்துவிட்டால் டிரெண்ட் அப்படியே மாறிவிடும் வாய்ப்பும் இருக்கிறது.
அதேபோல் தி.மு.க.வுக்கு இது இக்கட்டான சமயமே. காரணம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தான் எந்த தவறும் இழைக்கவில்லை என்று அதன் மையப்புள்ளியான ஆ.ராசா தனக்காக தானே வாதாடியிருக்கிறார். சி.பி.ஐ. தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையினை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருக்கும் ஆவணங்கள் அசாதாரணமானவை. அவை தன்னை நிச்சயம் இந்த வழக்கிலிருந்து மீட்டெடுக்கும்! என ராசா நம்புகிறார்.
ராசாவின் வாதங்களையும், அவர் தந்திருக்கும் ஆதார ஆவணங்களையும் டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் மிகுந்த கவனத்துடன் தான் அணுகியது. அதன் உள் நுட்பங்கள் நீதிபதி ஷைனியை சிந்திக்கவும் வைத்திருக்கிறது.
அதனால் தீர்ப்பு ராசாவுக்கு சாதகமாக வரலாம்! ஒருவேளை பாதகமாக வந்தாலும் அவரோடு காங்கிரஸ் அரசின் மிக முக்கிய புள்ளிகள் சிலர் சிறை செல்லும் நிலை வரலாம் என்றும் டெல்லியின் சீனியர் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஒருவேளை ராசா விடுவிக்கப்பட்டாலும் கூட கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாய் பணம் கைமாறிய வழக்கென்று இருக்கிறது. இதில் தீர்ப்பு பாதகமாக வந்தால் கனிமொழியின் நிலை பெரும் சிக்கலாகும் என்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் 2ஜி வழக்கின் தீர்ப்பானது ஒட்டுமொத்தமாக தி.மு.க.வுக்கு பாதகமாக வந்தால், அதுவே டிரெண்டிங் ஆகி ஆர்.கே.நகரில் அ.தி.மு.க.வின் வெற்றி மிகவும் எளிமைப்பட்டு விடும் என்றும் விமர்சகர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
இந்த புதிருக்கெல்லாம் விடை தெரிய இன்னும் 15 நாட்களே இருக்கின்றன.