கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து சிறுமிகள் உயிரிழந்த விவகாரம்...  அமைச்சர் தங்கமணி சொன்ன பதில்...

First Published Nov 1, 2017, 5:55 PM IST
Highlights
two children died due electric shock in kodungaiyur minister thangamani explains


சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் இன்று உயிரிழந்தனர்.. அந்த இரண்டு சிறுமிகளின் குடும்பத்துக்கு  தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி. 

சென்னை கொடுங்கையூரில் உயிரிழந்த சிறுமிகளின் வீடுகளுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக தாம் செல்வதாகக் கூறினார் அமைச்சர் தங்கமணி. இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார் தங்கமணி. அப்போது இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இந்தச் சம்பவம் முழுக்க முழுக்க மின் வாரிய அதிகாரிகளின் கவனக் குறைவினால் ஏற்பட்டதுதானே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி,  பணியில் கவனக் குறைவாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்க போன் செய்தால், தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், போன் எடுப்பதில்லை என்று பொதுமக்கள் குறை கூறுவதாகவும் செய்தியாளர்கள் கூறியபோது, எந்நேரமும் தொலைபேசிகள் இயங்கும். எனக்கும் என் வீட்டு எண்ணுக்கும் 24 மணி நேரமும் அழைக்கலாம் என்றார்.

லண்டனை விட சிறந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ஒருவர் கூறியிருந்தாரே... என்ன விதமான முன்னேற்பாடுகளை செய்தீர்கள் என்றுசெய்தியாளர்கள் கேட்டபோது,  பல ஆய்வுக்கூட்டங்களை நடத்தி மழை தடுப்புப் பணி குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினோம். எங்கெல்லாம் மின் சார பெட்டிகள் இப்படி தாழ்வாக இருக்கின்றனவோ அங்கே ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தி, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளச்  சொல்லியிருந்தோம். சென்னையில் 4 ஆயிரம் பெட்டிகள் இப்படி உள்ளன. இந்த விவகாரத்தில்,  மழை நீரில் அந்த வயர் மூழ்கியிருந்ததால் மின்கசிவு தெரியவில்லை என்று கூறினார். 

பாதுகாப்பு நடவடிக்கையாக, சென்னையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்தக் குழு சென்னை முழுவதும் ஆய்வு செய்யும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். 

முதல்வர் கோவையில் இருப்பது குறித்துக் கேட்டபோது, மற்ற அமைச்சர்கள் அந்த அந்தப் பகுதிகளில் தமிழகத்தில் பரவலாக ஆய்வு செய்கின்றனர் என்றும், முதல்வருக்கு முன்னரே திட்டமிட்ட பணி என்பதால், இன்று பாலம் திறப்புக்காகச் சென்றிருந்தார் என்றும், வைகை அணையை திறக்க முன்னேற்பாடு இருந்ததால் ஓபிஎஸ் அங்கே கலந்து கொண்டதையும் குறிப்பிட்டு, அவர்கள் இப்போதே சென்னை திரும்புவதாகக் கூறினார். 

முன்னதாக,  சென்னை கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் இன்று காலை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாத இரு சிறுமிகள் அந்தக் கம்பியை தெரியாமல் மிதித்தனர். மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் அவர்கள் இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமிகளை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் போலீசார் .

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளான பாவனா, யுவஸ்ரீ ஆகிய இருவரின் உயிரிழப்பு குறித்து இரங்கல் தெரிவித்த அமைச்சர் தங்கமணி, இந்த விவகாரத்தில் 3 அதிகாரிகள், 5 இடை நிலைப் பணியாளர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியும் அறிவித்தார். 

click me!