குருவாயூர் கோயிலில் துலாபாரம் நேர்த்திக்கடன்.. துர்கா ஸ்டாலினால் கோயிலுக்கு வரிசைகட்டும் தமிழக அரசியல்வாதிகள்!

By Asianet TamilFirst Published Dec 28, 2021, 9:39 AM IST
Highlights

கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு கடந்த 17-ஆம் தேதி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். அங்குள்ள துலாபாரத்தில் அமர்ந்து தன்னுடைய எடைக்கு எடையாக நாட்டுச் சர்க்கரையை வழங்கினார். இதன்மூலம் நேர்த்திக்கடனை துர்கா ஸ்டாலின் நிறைவேற்றினார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் துலாபாரம் நேர்த்திக் கடனை நிறைவேற்றிய பிறகு, தமிழகத்திலிருந்து அரசியல்வாதிகள் துலாபாரம் நேர்த்திக் கடனுக்காக அதிகளவில் முன்பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கோயில்களில் வேண்டிக்கொண்டார். தேர்தல் முடிவுக்குப் பிறகு கொரோனா தொற்று வேகம் பிடித்ததால், அவரால் கோயில்கள் எங்கும் செல்ல முடியவில்லை. தொற்று குறைந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக 7 கி.மீ. நடந்து வந்து வேண்டுதலை துர்கா ஸ்டாலின் நிறைவேற்றினார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதியன்று துர்கா ஸ்டாலின், கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு வருகை தந்தார். 

அங்குள்ள துலாபாரத்தில் அமர்ந்து தன்னுடைய எடைக்கு எடையாக நாட்டுச் சர்க்கரையை வழங்கினார். இதன்மூலம் நேர்த்திக்கடனை துர்கா ஸ்டாலின் நிறைவேற்றினார். மேலும் கோயிலைச் சுற்றி துர்கா ஸ்டாலின் சார்பில் சுற்று விளக்குகளும் ஏற்றப்பட்டன. துர்கா ஸ்டாலின் வருகையையொட்டி குருவாயூர் தேவசம்போர்டு சிறப்பு ஏற்பாடுகளையும் செய்திருந்தது. துர்கா ஸ்டாலின் துலாபாரம் நேர்த்திக் கடனை செய்து முடித்து 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. அவருடைய வருகைக்குப் பிறகு தமிழகத்திலிருந்து துலாபாரம் நேர்த்திக்கடன் தொடர்பாக போன் அழைப்புகள் அதிகரித்துள்ளதாக கோயில் தேவசம்போட்டு வட்டாரங்கள் கூறுகின்றன.

குறிப்பாக தமிழகத்திலிருந்து முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகளில் இருந்து போன் விசாரணை அழைப்புகள் அதிகரித்துள்ளதாம். துலாபாரம் நேர்த்திக்கடனை செலுத்தும் வழிமுறை, நேரம், முன்பதிவு, கோயிலில் தங்கும் வசதி என விசாரணைகள் இதுவரை இல்லாத அளவுக்கு கூடியிருக்கிறதாம். மேலும் முக்கிய அமைச்சர்களின் வீடுகளிலிருந்து துலாபாரம் நேர்த்திக் கடனுக்கு முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

click me!