
ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அசுர வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், டெல்டா வகை வைரஸை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது ஒமிக்ரான் ஆகும். கொரோனா தடுப்பு பணிக்கும் இது பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அதன் பரவல் விகிதம் தீவிரமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவை பொருத்தமட்டில் 22 மாநிலங்களில் 653 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகத்தில் 116 நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிக பாதிப்பு இருக்கிறது. இதில் இந்தியா எந்த சூழலையும் சமாளிக்கும் வகையில் தயாராக இருக்க வேண்டும்.
குறிப்பாக மாநிலங்கள் தங்கள் பகுதியில் உள்ள சுகாதார நிலையங்களின் மருத்துவ கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் மற்றும் தேவையான மருந்துகளை கையிருப்பு வைத்து கொள்ள வேண்டும். உள்ளூர் மட்டத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தடை விதிக்கலாம். குறிப்பாக பண்டிகைகளின் போது மக்கள் கூடுவதை தவிர்க்க உள்ளூர் மட்டத்திலான கட்டுப்பாடுகளை அதிகரிக்க அறிவுத்தப்பட்டுள்ளது. டெஸ்ட்-டிராக்-டிரீட்மெண்ட் எனும் முறையை கடைப்பிடிக்க வேண்டும். பரவலை ஆரம்ப கட்டத்திலே கட்டுப்படுத்த மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.
சமூக பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொரோனா மாறுபாடான ஒமிக்ரான் சவாலாக இருக்கும் என்பதால் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் வரும் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் தேவைப்பட்டால் இரவு நேர ஊடரங்குகளை அமல்படுத்திக் கொள்ளலாம்’ என வலியுறுத்தியுள்ளார்.