
ஆர்.கே.நகரில் நடைபெறும் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த 20 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரை சொல்லி 6000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்று நூதனமான பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆர்.கே.நகரில் நடைபெற்று வரும் தேர்லில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரால் கடந்த ஏபரல் மாதம் 12 ஆம் தேதி நடக்கவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது. நீண்ட இழுபறிக்குப் பின் இன்று மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலிலும் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.
ஆளும் அதிமுக சார்பில் 2 நாட்களுக்கு முன்பு வாக்காளர்களுக்கு 120 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததது. இந்நிலையில் இன்று அதிகாலை டிடிவி தரப்பினர் நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இது தொடர்பாக பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் புகார் ஒன்னை தெரிவித்துள்ளார். அதில் சென்னை ஆர்.கே.நகரில் இன்று அதிகாலை வாக்காளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் தரப்பினர், ஒவ்வொரு ஓட்டுக்கும் 20 ரூபாய் வீதம் கொடுத்தாக குறிப்பிட்டார்.
அந்த ரூபாய் நோட்டில் உள்ள சீரியல் நம்பரை குறிப்பிட்ட ஒரு தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து தெரிவித்து ஓட்டுக்கு 6000 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
ஹவாலா ஸ்டைலில் இது போன்று டி.டி.வி.தினகரன் தரப்பினர், பணம் பட்டுவாடா செய்து வருவதாகவும் கரு.நாகராஜன் தெரிவித்தார்.
இந்த 20 ரூபாய் நோட்டை எப்படி 6000 ரூபாயாக மாற்றுவது என்பது குறித்து அவர்கள் பொது மக்களிடம் விரிவாக எடுத்துக்கூறியுள்ளதாகவும் பாஜக வேட்பாளர் தெரிவித்தார்.
இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்த கரு.நாகராஜன், ஆனாலும் இந்த புகாரால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை என கூறினார்.
தேர்தல் ஆணையம் தற்போது செயலிழந்து போயிருப்பதாகவும், அதிமுகவும் தினகரன் தரப்பினரும் கட்சியை கம்பெனி நடத்துவது போல் நடத்தி வருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.