
அதிமுக மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் 6 ஆயிரம் என்ன 60 ஆயிரம் கொடுத்தால் கூட ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஏமாற தயாராக இல்லை என்றும், அங்கு திமுகதான் ஜெயிக்கும் என்றும் அக்கட்சி வேட்பாளர் மருது கணேஷ் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்காக வாக்கு சாவடிகளுக்கு முன் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த வாக்கு பதிவு மாலை 5 மணிவரை நடைபெறும். தேர்தலுக்காக 258 வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதியில் அதிமுக, தினகரன் உள்ளிட்டோர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் தனது வாக்கினைஇன்று காலை 8.05 மணியளவில் பதிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெறும் என நம்புவதாக தெரிவித்தார்.
இத்தொகுதியைப் பொறுத்தவரை ரூ.6 ஆயிரம் அல்ல, ரூ.60 ஆயிரம் கொடுத்தாலும் ஆர்.கே. நகர் மக்கள் ஏமாற தயாராக இல்லை என்றும், திமுகதான் ஜெயிக்கும் என்றும் தெரிவித்தார்.