
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இன்று காலை வாக்குப் பதிவு துவங்கியது. திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வரதப்பா நாயுடு காப்பக சாவடியில் வாக்குப் பதிவு துவங்கிய அடுத்த நிமிடமே வாக்களித்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்த மருதுகணேஷ், ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியன பயன்படுத்தப்பட உள்ளன.
இத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்பட 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.