
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ ஆதாரத்தை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுத்த வேண்டும் என ஜெ,மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பில் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று இடைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், நேற்று டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் திடீரென ஜெ, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வீடியோ ஆதரத்தை வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆனால் இந்த சம்பவம் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்றும் இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். மேலும் வெற்றிவேல் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஜெ.,சிகிச்சை வீடியோ வெளியிட்ட வெற்றிவேல் எம்.எல்.ஏ.,மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை அண்ணா சதுக்கம் போலீஸ்நிலையத்தில் ஜெ., விசாரணை ஆணையம் சார்பில் போலீசில் புகார் அளித்துள்ளது.
அந்த புகாரில் வெற்றிவேல் தன்னிச்சையாக வீடியோவை வெளியிட்டிருப்பது விசாரணை ஆணையத்தை அவமதிக்கும் செயலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தொடர்பான ஆவணங்களை யார் வேண்டுமானாலும் வழங்கலாம் என ஆணையம் தெரிவித்திருந்தது என்றும் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டும் உள்நோக்கத்துடன் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டுள்ளார் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீடியோவை விசாரணை ஆணையத்திடம் வழங்காமல் வெளியிட்டடு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வெற்றி வேல் செயல்பட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.