
இரட்டை இலை சின்னம் இபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே என உத்தரவிட்ட 24 மணி நேரத்துக்குள் ஆர்.கே.நகருக்கு, தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ள நிலையில் அங்கு சுயேட்சையாக களமிறங்கலா? என்பது குறித்து டி.டி.வி.தினரன் அணி சார்பில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பின்பு இரட்டை இலை சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்குத்தான் என தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது. இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் கிடைக்கும் என டி.டி.வி.தினகரன் தரப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால் தற்போது இரட்டை இலை சின்னம் இல்லை என்றாகிவிட்ட நிலையில், ஆர்,கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக அம்மா அணி சார்பில் வேட்பாளராக களமிறங்கிய டி.டி,வி.தினகரன், அங்கு தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார்.
தற்போது தினகரன் அங்கு மீண்டும் போட்டியிடுவாரா ? அல்லது வேறு யாரையாவது களத்தில் இறக்கிவிடுவாரா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.
இந்நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக உள்ள 18 எம்எல்ஏககளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்கள் பக்கம் இழுக்க பேரம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து டி.டி.வி.தினகரன் நாளை தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது ? யாரை வேட்பாளராக நிறுத்துவது? கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
இதற்காக அந்த அணியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.