
எடப்பாடியின் அமைச்சர் படையும், பன்னீரின் மாஜி அமைச்சர்கள் படையும் சட்டையை பிடித்துக் கொள்ளாதது மட்டும்தான் பாக்கி! மற்றபடி மோதலின் உச்சத்தில் உறுமிக் கொண்டிருக்கிறதாம் இரண்டு தரப்பும் என்கிறார்கள் விபரமறிந்தோர்.
காரணம்?...உள் புரட்சி மற்றும் கலகத்துக்கு படை திரட்டி நிற்கிறது பன்னீரின் அணி என்கிறார்கள். அதாவது இரட்டை இலை சின்னம் இப்போது பழனி - பன்னீர் அணிக்கு கிடைத்துவிட்டது. ‘மோடி ஆதரவு இருக்கிறதாலே இரட்டை இலை நமக்கு நிச்சயம் கிடைச்சுடும்.’ என்று அன்றே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னதன் மூலம் சின்னம் தினகரன் கைகளுக்கு போகாது என்பது எப்போதோ மக்களுக்கு புரிந்துவிட்டது.
மக்களுக்கு புரிந்தது மைத்ரேயனுக்கு புரியாதா என்ன? அதனால்தான் சின்னம் தீர்ப்பு வருவதற்கு சில நாட்கள் முன்னதாக ட்விட்டரில் ‘இரு அணிகளும் இணைந்துவிட்டது ஆனால் மனம்?’ என்று கொளுத்திப் போட்டு உள் புரட்சிக்கான விதையை நட்டார். அதாவது சின்னம் பழனி - பன்னீரின் கைகளுக்கு வந்தது பின், எடப்பாடியை டம்மி செய்து ஆட்சி மற்றும் கட்சி இரண்டிலும் பன்னீர் மேலே வரவேண்டும் என்பதுதான் மேலிருந்து அந்த கூட்டத்திற்கு வந்த உத்தரவாம்.
எடப்பாடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மேல் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு துளியும் அபிமானமில்லை. அதேவேளையில் தர்மயுத்தம் நடத்திய வகையில் பன்னீர் டீமின் மேல் அட்லீஸ்ட் தொண்டர்களுக்காவது சிறு ஆதரவு இருக்கிறது. இதை அப்படியே முதலீடாக்கி ஒட்டு மொத்த கட்சியையும் பன்னீர் தன் கைக்குள் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று கட்டளை வந்திருக்கிறதாம். இந்த ஸ்கெட்சை வாங்குவதற்காகத்தான் சில நாட்களுக்கு முன் ‘மக்கள் நல திட்டங்களை அளிக்க வந்தேன்.’ எனும் பெயரில் பன்னீர் டெல்லி வந்து சென்றார் என்கிறார்கள்.
பன்னீர் அங்கு சென்றபோதே இலை உங்கள் கூட்டு அணிக்கு கிடைக்கும், சின்னம் கிடைக்கும் முன்பே சிறு சலசலப்பை துவக்க வேண்டும், சின்னம் கிடைத்த பின் உங்கள் ஆதரவாளர்கள் மூலம் ஒரு அசாதாரண, அதிருப்தி நிலை உருவாகி நீங்கள் அதிகாரத்துக்கு வருவது உங்களின் அரசியல் எதிர்காலத்துக்கும், கட்சியின் எதிர்காலத்துக்கும் நல்லது என்று வழிகாட்டல்கள் வந்து விழுந்ததாம்.
இதை தொடர்ந்தே பன்னீர் தர்மயுத்தம் சீசன் - 1 நடத்தியபோது அவரோடு தோள் நின்ற முக்கியஸ்தர்கள் ஒவ்வொருத்தராய் வேலையை காட்ட துவங்கினார்கள் என்கிறார்கள் விமர்சகர்கள்.
’கோயமுத்தூரில் அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டத்தை கவர்னர் நடத்தியது வேதனை தருகிறது. கவர்னர் இப்படி செய்யலாமா?’ என்று முணுசாமி அதே கோயமுத்தூரில் பட்டாசை பற்ற வைத்தார்.
முதல்வர் எடப்பாடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் கவர்னரின் ஆய்வை வரவேற்று (வேறு வழியில்லாமல்) பேசிய நிலையில் முணுசாமி இப்படி முத்தாய் உதிர்த்தது உரசலின் முதல் நிலை.
அடுத்து ’அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை இன்னும்.’ என்று முன்னாள் பா.ஜ.க. பிரமுகரும், எம்.பி.யுமான மைத்ரேயன் கொளுத்திப் போட்டார். எடப்பாடிக்கும், அவரது அணிக்கும் இது பெரும் எரிச்சலை தந்தது. சரி ஏதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லிவிட்டார் போல் என்று நினைத்து, தம்பிதுரையை உசுப்பிவிட்டனர். தம்பிதுரையும் இதற்கு ‘அது மைத்ரேயனின் சொந்த கருத்து’ என்று விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல, தம்பிதுரை பதிவிட்ட ஈரம் காய்வதற்குள் ‘இது என் சொந்த கருத்தல்ல. பெரும்பாலான கழக தொண்டர்களின் உணர்வைத்தான் நான் எதிரொலித்துள்ளேன்.’ என்று விரிசலை விசாலமாக்கினார் மைத்ரேயன்.
அப்போதுதான் பிர்சனை வேறு ரூட்டில் பயணிப்பது எடப்பாடி அணிக்கு உரைத்தது. ‘இவர்கள் ஏதோ ஒரு முடிவுடந்தான் முணுமுணுக்க துவங்குகிறார்கள்.’ என்று எண்ணிய நேரத்தில் அவைத்தலைவர் மதுசூதனனோ ‘நானெல்லாம் கட்சியில எதையும் எதிர்பார்க்கல. ஜெயலலிதாவே என்னை டம்மியாதான் வெச்சிருந்தார். ஆனா எனக்கு அம்மாவே போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில போட்டியிடும் வாய்ப்பை கொடுத்தவர் பன்னீர்தான். அவர்தான் என்றும் என் தலைவர்.” என்று எடப்பாடியை வெளிப்படையாக ‘நீங்கள் என் தலைவர் இல்லை’ எனும் ரீதியில் விமர்சித்தார்.
இது பஞ்சாயத்தை பெரிதாக்கி இருக்கிறது. தினம் தினம் ஒரு உள் கலவர ஸ்டேட்மெண்டை தட்டிவிட்டு பிரச்னையை பெரிதாக்கிக் கொண்டிருக்கும் பன்னீர் டீமின் போக்கில் அதிருப்தியான எடப்பாடிக்கு நெருங்கிய அமைச்சர்கள் கொதித்துப் போயுள்ளனர். ‘யோரோ சொன்னாங்கன்னு கேட்டுக்கிட்டு இவங்களை மறுபடியும் சேர்த்துக்கிட்டதே தப்பு. தனியாவே தவிக்க விட்டிருக்கணும். செல்வாக்கு குறைஞ்ச பன்னீர் அப்படியே அரசியல்ல ஒதுங்கியிருப்பார்.’ என்று கோட்டையில் கொதித்திருக்கின்றனர்.
இது அப்படியே பன்னீர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் காதுகளுக்குப் போக, “யாரு அரசியல்ல ஒதுங்கியிருப்பாங்க? நாங்க மறுபடியும் சேர்ந்ததாலேதான் இன்னமும் உங்க ஆட்சி ஓடிக்கிட்டு இருக்குது. சின்னம் கிடைச்சதே உங்க கூட நாங்க இருக்கிறதாலேதான்.” என்று பதிலுக்கு எகிற, அது அப்படியே எதிரணிக்கு பாஸ் ஆகிவிட்டது.
இதனால் இரண்டு தரப்பும் மீட் செய்து கொள்ளும் பொழுதுகளில் மீடியாவின் பார்வைக்கு படாமல் உரசலும், முறைப்பும் முளைக்க துவங்கியிருக்கிறது. பொதுவாக சாதாவாக இருக்கும் ஒரு சீனியர் அமைச்சரே, பன்னீரின் வலது கையை பார்த்து ‘ஏனுங்க, மறுபடியும் பிரச்னையை துவக்குறீங்க? தினகரனை உள்ளே வந்து உட்கார வைக்காம விடமாட்டீங்க போலிருக்குதே! நாம சண்டை போட்டுகிட்டா அவருக்குதான் கொண்டாட்டம்.’ என்றாராம்.
அதற்கு வலது கையோ ‘தெரியுதுல்ல அப்புறம் எதுக்கு எங்க தலைவரை (பன்னீரை) டம்மியா வெச்சிருக்கீங்க?’ என்று இவர் எகிற, ‘துணை முதல்வர் பதவி, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி ரெண்டையும் ஏத்துக்கிட்டுதானே வந்தீங்க. அப்புறமென்ன? வேண்டாமுன்னா வராமலே இருந்திருக்க வேண்டிதானே!’ என்று அவர் பதிலுக்கு எகிற...’யாருங்க ஓடி வந்து ஒட்டுனது. நீங்கதானே ஆள் மேலே ஆள்விட்டீங்க.’ என்று இவர் கடிக்க சூழல் ரசாபாசமாகி இருக்கிறது.
இப்படித்தான் அங்கேயுமிங்கேயுமாக இரண்டு டீமுக்கும் நடுவில் முட்டல் மோதல்கள் உருவாகி இருக்கின்றனவாம்.
இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து அரசியல் விமர்சகர்கள் சொல்வது, “எடப்பாடியின் தரப்பை டெல்லிக்கு பிடிக்கவில்லை, அவர்களின் சாய்ஸ் பன்னீர்தான். அதனால்தான் சின்னம் இவர்களின் கைகளுக்கு கிடைக்கும் என தெரிந்ததும் மைத்ரேயனை பேச விட்டிருக்கிறார்கள். மைத்ரேயனின் பேச்சை பன்னீர் அணியின் அத்தனை பேருமே ஏற்றிருக்கிறார்கள். நத்தம் விசுவநாதனும் அதற்கு ஆதரவு தந்திருக்கிறார்.
மதுசூதனனும், முணுசாமியும் ஏற்கனவே எடப்பாடி எரிச்சல் படும் வகையில் பேசியிருப்பதையும் வைத்துப் பார்த்தால் கட்சியின் பெரும் அதிகாரத்தை பன்னீருக்கு வழங்க சொல்லி இவர்கள் கேட்பார்கள். அது கிடைக்காத பட்சத்தில் உள்ளே இருந்து கொண்டே உடைப்பை நிகழ்த்துவார்கள். தர்மயுத்தம் சீசன் 1 போல் வெளியே சென்று போராடுவதல்ல. இந்த முறை சீசன் 2-வில் உள்ளே இருந்து போர்க்கொடி தூக்கி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் தங்கள் பக்கம் இழுத்து கட்சியை முழுதாக கைப்பற்றுவதுதான் இவர்களின் நோக்கமும், இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அஸைன்மெண்டும்.
பன்னீரின் கை ஓங்க ஓங்க சில அமைச்சர்களும், கணிசமான மாவட்ட செயலாளர்களும் அவர் பக்கம் சாயும் டிராமாக்கள் நிகழும். கட்சி பன்னீரின் கைகளுக்கு போவதற்கான அத்தனை காட்சிகளும் அரங்கேற்றப்படும்.
சரி இவ்வளவு குரல்கள் கேட்குதே! மைத்ரேயன், மதுசூதனன் உள்ளிட்ட தன் ஆதரவாளர்கள் தனக்காக குரல் கொடுக்கையில் பன்னீர் அமைதியாக இருப்பது ஏன்? என்கிறீர்களா!...
ஆட்டுவிப்பவனும் ஆடவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?!...” என்கிறார்கள்.
அம்மாடியோவ்!...