
டி.டி.வி.தினகரன் புதிய கட்சி தொடங்கினால் நாங்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாகவே இருப்போம் என முன்னாள் அமைச்சரும், தினகரன் ஆரவாளருமான செந்தில் பாலாஜி தெரிவித்துதுள்ளார்.
கடந்த வாரம் உதகை சென்ற டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும், தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை செய்தபின் புதிய கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்கப்போவதாகவும் கூறினார்.
ஆனால் அடுத்த நாளே தனிக்கட்சி தொடங்கப் போவதில்லை என்றும், அதிமுக அம்மா என்ற பழைய அணியின் பெயரையே பயன்படுத்தப் போவதாகவும் கூறினார்.
இதனிடையே டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன், செய்தியாளர்களிடம் பேசும்போது, சசிகலாவுக்குப் பிறகுதான் தினகரன் என்றும், அவர் தனிக்கட்சி தொடங்கினால் அவர் பின்னால் எல்லாம் போக முடியாது என அதிரடியாக தெரவித்தார்.
மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும், என்றுமே அதிமுகதான் என்றும். நாங்கள் யாருமே தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் அவர் பின்னால் போகமாட்டோம் என கூறினார்.தங்கத் தமிழ்செல்வனின் இந்த பேட்டி டி.டி.வி.தினகரன் தரப்பை அதிர்ச்சி அடையச் செய்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாங்கள் அனைவருமே தினகரன் பக்கம்தான் என அதிரடியாக தெரிவித்தார். தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் நாங்கள் அந்த கட்சிக்கு சென்றுவிடுவோம் என கூறினார்.
இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டணியை உடைக்க டி.டி.வி.தினகரன் பெரு முயற்சி எடுத்துவரும் நிலையில், தனது அணியினரே இப்படி அடித்துக் கொள்வது அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி , இந்த அரசு மக்களின் வயிற்றில் அடிப்பதாக தெரிவித்தார். இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விரைவில் இந்த ஆட்சியை பதவியில் இருந்து இறக்கி விடுவார்கள் என்றும் கூறினார்.