தமிழக முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் எந்த வேற்றுமை இல்லாமல், ஹிட்லரின் 2 சகோதரர்கள் போல் உள்ளனர் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார்.
ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு நீக்கம்
தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள், ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் வாக்குறுதி கொடுத்தார். அவர் எப்படி நீட்டை நீக்குகிறார் என நாங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று அவர் ஹிட்லர் போல, அவர் கொடுத்த வாக்குறுதிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஊழல் நிறைந்ததாக இருந்ததால் மக்களின் நம்பிக்கையை இழந்தது. தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள்.
யாருடன் கூட்டணி.?
ஆனால் அவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் ஆட்சி செய்கிறார்கள். எனவே இவர்களுக்கு மாற்றுக்கட்சி அ.ம.மு.க.தான். எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து இருப்பதால், எங்களை உறுதியாக தேர்ந்தெடுப்பார்கள். தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பாஜகவில் நண்பர்கள் மட்டும் தான் உள்ளார்கள், என்றுமே அவர்களுடன் உறவு கிடையாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது யாருடன் கூட்டணி என சரியான நேரத்தில் முடிவெடுப்போம்.
கூட்டணி இல்லாவிட்டாலும் தனித்து போட்டியிடுவோம் என தெரிவித்தவர், ஓ.பன்னீர்செல்வமும், நானும் அண்மையில் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றோம். வருங்காலத்தில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மதுரையில் எடப்பாடி பழனிசாமி நடத்தியது எழுச்சி மாநாடு இல்லை. அவரது கம்பெனிக்கு வீழ்ச்சி மாநாடாகும்.
துரோக தமிழர்னு பட்டம் கொடுக்கலாம்
அந்த மாநாட்டில் அதிகபட்சமாக சுமார் 2லிருந்து 2.50 லட்சம் பேர் தான் வந்துள்ளார்கள். அவர்கள் ஒரு சைபரை சேர்த்துச் சொல்லியுள்ளார்கள். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமிக்குப் புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கியுள்ளார்கள். இதனால் புரட்சி என்ற வார்த்தைக்கே மரியாதை இல்லாமல் போய் விட்டது. அவருக்கு துரோகத் தமிழர் என்று அவருக்குப் பட்டம் கொடுக்கலாம். காலில் விழுந்து பதவியைப் பெற்றுக்கொண்டும், தனது ஆட்சியை நீட்டிக்கக் காரணமாக இருந்த ஓ.பி.பன்னீர்செல்வம் போன்றவர்களுக்குத் துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிசாமி என டிடிவி தினகரன் விமர்சித்தார்.
இதையும் படியுங்கள்
எடப்பாடி பழனிசாமி புரட்சி தமிழரா..! மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்- சீறும் ஓபிஎஸ்