செந்தில்பாலாஜி பயந்த சுபாவம்,பாவம்.! திமுகவில் நீண்ட நாள் தங்க மாட்டார்- அடித்து கூறும் டிடிவி தினகரன்

By Ajmal Khan  |  First Published Jun 20, 2023, 3:10 PM IST

அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜிக்கு மட்டும் நெஞ்சு வலி வரவில்லை. ஒட்டுமொத்த திமுகவுக்கே வந்துவிட்டதாக தெரிவித்த டிடிவி தினகரன், திமுக தலைவர் பேச்சே அதை காட்டுவதாக தெரிவித்தார். 


சுய நலத்தால் நம்மை விட்டு பிரிந்து சென்றனர்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமமுகவில் அமைப்பு ரீதியிலான தேர்தல் நடத்த தீர்மானம், அமைச்சர்களின் ஆணவ பேச்சு, தலை தூக்கும் தீண்டாமை ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் தெருமுனை, பொதுக்கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து செயற்குழு கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், ஒரு சிலர் சுய நலத்தால் நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். சுயநலம் மாத்திரம் குறிக்கோளாக கொண்டவர்கள் பிரிந்து சென்றதாக குறிப்பிட்டார். 

Tap to resize

Latest Videos

திமுகவில் நீண்ட நாள் தங்க மாட்டார்

ஜெயலலிதா ஆட்சியை மீட்டெடுக்க நம்முடன் பயணித்தவர்கள் நம்முடன் தான் இன்னும் உள்ளார்கள். குழப்பத்தில் உள்ளவர்கள் நீங்கி குழப்பமான இடத்துக்கு சென்றுவிட்டார்கள். அமமுக தெளிந்த நீரோடை போல பயணிக்கிறது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாதவர்கள் நிதானமாக நம்முடன் செயல்படுகிறார்கள். தேர்தல்களில் வெற்றிகள் பெறாவிட்டாலும் மரியாதை உள்ள கட்சியாக அமமுக உள்ளது. அமமுகவை விட்டு சென்றவர்கள் இன்று என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. செந்தில்பாலாஜி திமுகவில் நீண்ட நாள் தங்க மாட்டார் என முன்பே கணித்து அமமுக நிர்வாகிகளிடத்தில் சொன்னேன். அதி புத்திசாலித்தனம் என்றுமே ஆபத்தில் தான் முடியும். 

ஒட்டுமொத்த திமுகவுக்கே நெஞ்சு வலி

செந்தில்பாலாஜிக்கு உண்மையிலேயே உடல்நிலை சரியில்லை தான், பயந்த சுபாவம்,  பாவம். அமலாக்க விசாரணை எல்லாம் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.நான் 30 வயதில் இருந்தே அமலாக்க துறை விசாரணையை எதிர்க்கொண்டு வருகிறேன். என்னை கைது செய்த போது 60 நாள் வைத்திருப்பார்கள் என எண்ணினேன் ஆனால் 30 நாளில் விட்டுவிட்டார்கள். சட்டம் தன் கடமையை செய்கிறது. அதை எதிர்கொள்ள தைரியம் வேண்டும் என கூறினார்.  அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜிக்கு மட்டும் நெஞ்சு வலி வரவில்லை. ஒட்டுமொத்த திமுகவுக்கே வந்துவிட்டதாக தெரிவித்தவர், திமுக தலைவர் பேச்சு அதை காட்டுவதாக கூறினார். 

அமமுக இல்லாமல் அதிமுக தேராது

குக்கர் சின்னத்தை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேருங்கள், கூட்டணி நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பார்க்கலாம். சின்னத்துக்காக அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு சிலர் சென்றார்கள்.  அமமுக இல்லாமல் அதிமுக தேராது அதான் உண்மை. கொங்கு மண்டலத்திலும் அதிமுக சரிவை சந்தித்து வருகிறது. அதிமுகவிடம் பணம் உள்ளது, சின்னம் உள்ளது ஆனால்  அதை வைத்தும் ஈரோடு கிழக்கில் தோல்வி அடைந்தார்கள்.  நம் நிர்வாகிகள் சரியான முறையில் செயல்படும்பட்சத்தில் வெற்றி வாய்ப்பை நிச்சயம் தொட்டுவிட முடியும் என டிடிவி தினகரன் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜியை தொடர்ந்து அவரது தம்பிக்கு ஸ்கெட்ச் போடும் அமலாக்கத்துறை.. நழுவும் அசோக்குமார்..!

click me!