ஐஸ் வைக்கும் டி.டி.வி.தினகரன்... சூட்கேஸ் கேட்கும் பிரேமலதா..!

By Thiraviaraj RMFirst Published Mar 18, 2021, 4:53 PM IST
Highlights

இப்படி சொன்னா எப்படி என்று நொந்துபோன இருவரும் தினகரனை மீண்டும் தொடர்புகொண்டு கண்ணைக் கசக்க, வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு முதற்கட்டமாக கவனிப்பதாக சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 60 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கையெழுத்திட்டார். இந்நிலையில் தற்போது கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தை டி.டி.வி. தினகரன் சந்தித்தார். தேர்தல் கூட்டணிக்குப் பிறகு முதன்முறையாக டி.டி.வி.தினகரன், விஜயகாந்தை சந்தித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டி.டி.வி.தினகரன், ''எங்கள் கூட்டணியின் ஒரே கொள்கை தமிழகத்தில் தீய சக்தியான திமுகவும், துரோக கட்சியான அதிமுகவும் ஆட்சிக்கு வரக்கூடாது. அதற்காகத்தான் ஒன்று சேர்ந்துள்ளோம். எங்களுக்கும் தேமுதிகவுக்கும் ஒரு சில கொள்கைகளில் முரண் இருப்பதால் கூட்டணி வைக்க கூடாது என்றில்லை. சசிகலாவின் மானசீக ஆதரவு எங்கள் கூட்டணிக்குத்தான் இருக்கும். இந்த கூட்டணி கட்டாயத்தின் பேரில் உருவான கூட்டணி அல்ல, நாங்கள் பத்து நாட்களாக பேசிக்கொண்டுதான் இருந்தோம்'' என்றார்.

இது ஒருபுறமிருக்க, பெட்டி கொடுக்காமல் தினகரன் கடுக்காய் கொடுப்பதாக டென்ஷனில் இருக்கிறாராம் பிரேமலதா. கூட்டணி ஒப்பந்தத்தில் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் கையெழுத்துப் போடவே இல்லை. ஆனாலும், வேறு வழியின்றி அவசரத்துக்கு அ.ம.மு.க.வுடன் கூட்டணி முடிவானது. அதிமுகவை முறைத்துக் கொண்டு அமமுக அணியில் சங்கமமான தேமுதிகவிற்கு வைட்டமின் ’ப’தான் தற்போது பிரதான பிரச்சனையாக இருக்கிறது.
 
விஜயகாந்தை சந்திக்க வந்தார் தினகரன். அப்போது செய்தியாளர்களிடமும் பேசினார். அதன்பிறகு, தேர்தல் செலவு குறித்து பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. எங்களுக்கு எப்போ பெட்டி கிடைக்கும் என்பதுதான் பிரேமலதாவின் முதல் கேள்வியாக இருந்திருக்கிறது.‘‘என்னைச் சுற்றி ஏகப்பட்ட பிரச்சனைகள். முன்பு போல பணத்தை எளிதாக வெளியே எடுக்க முடியவில்லை. அதனால் தேர்தல் நெருக்கத்தில் ஏதோ கொஞ்சம் தருகிறேன். மற்றபடி பெருசா எதிர்பார்க்காதீங்க’’ என தினகரன் கை விரித்துவிட்டாராம். இப்படி சொன்னா எப்படி என்று நொந்துபோன இருவரும் தினகரனை மீண்டும் தொடர்புகொண்டு கண்ணைக் கசக்க, வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு முதற்கட்டமாக கவனிப்பதாக சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.
 

click me!