தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்களின் பதிவை ரத்து செய்ய கோரி வழக்கு. விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Mar 18, 2021, 4:37 PM IST
Highlights

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பதிவை  ரத்து செய்யக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, சங்கங்கள் பதிவாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பதிவை  ரத்து செய்யக் கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, சங்கங்கள் பதிவாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கவுரவ செயலாளர் மன்னன் தாக்கல் செய்த மனுவில், தங்கள் சங்கம் 1979ம் ஆண்டு துவங்கப்பட்டு, 40 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (Tamil film active producers association) என்ற பெயரிலும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ( Tamilnadu movie makers sangam )என்ற பெயரிலும் இரு புதிய சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களால் துவங்கப்பட்டுள்ள இந்த சங்கங்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டப்படி, ஒரு சங்கத்தின் பெயரை ஒத்த பெயருடன் எந்த சங்கத்தையும் பதிவு செய்யக் கூடாது என்பதால், இரு சங்கங்களின் பதிவை ரத்து செய்யக் கோரி சென்னை சங்கங்கள் பதிவாளர்களுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என தெரிவித்துள்ளார். தனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மனுவுக்கு ஏப்ரல் 8ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, சென்னை தெற்கு மற்றும் மத்திய மாவட்ட சங்கங்கள் பதிவாளர்களுக்கும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். 

 

click me!