மக்கள் கருத்துதான் பாஜகவின் வாக்குறுதி; புதுச்சேரி தேர்தல் அறிக்கையில் பாஜக புரட்சி! ராஜீவ் சந்திரசேகர் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 18, 2021, 4:10 PM IST
Highlights

புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக, மக்களின் கருத்தை கேட்டு பாஜக தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. பாஜக தேர்தல் அறிக்கை வரும் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. புதுச்சேரியில் ஆட்சிக்காலம் முடியும் முன்பே நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, பெரும்பான்மை இல்லாமல் கவிழ்ந்த நிலையில், புதுச்சேரியில் ஆட்சியமைக்கும் முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டுவருகிறது.

புதுச்சேரியில் ஆட்சியமைக்க தீவிரம் காட்டிவரும் பாஜக, கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே புதுச்சேரியில் தீவிர களப்பணியாற்றிவருகிறது. புதுச்சேரி தேர்தல் பாஜக மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் களத்தில் இறங்கி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.

புதுச்சேரிக்கு ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வருகை தந்த நிலையில், அவர்கள் மீண்டும் வரவுள்ளனர். அவர்களின் கடந்த வருகையே, புதுச்சேரி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், ஆதரவையும் அதிகரித்தது. 

இந்நிலையில், இன்று புதுச்சேரியில் பாஜக மேலிட பொறுப்பாளரும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவின் தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் மற்றும் புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இதுவரை இந்திய அரசியல் வரலாற்றில் நடந்திராத வகையில் முதல் முறையாக மக்களின் கருத்தை கேட்டு அதையே தேர்தல் அறிக்கையாக பாஜக வெளியிடவுள்ளதாக தெரிவித்தனர். 30 தொகுதிகளிலும் மக்களின் கருத்தை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

மேலும், டெல்லியில் ஏசி அறையில் அமர்ந்துகொண்டு ஆட்சி செய்யும் காங்கிரஸ் ஆட்சியை போன்றல்லாமல், புதுச்சேரியில் பாஜக ஆட்சி மக்களாட்சியாக அமையும் என்றும் பிரதமர் தெரிவித்திருந்தபடிதான் அமையும் என்று தெரிவித்தனர். 

புதுச்சேரியில் விவசாயிகள், மீனவர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புறம் என அனைத்துதரப்பு மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு அதனடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் பேரின் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக பாஜக புதுச்சேரி தலைவர் சாமிநாதன் தெரிவித்தார்.

வரும் 24ம் தேதி பாஜக தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று தெரிவித்த ராஜீவ் சந்திரசேகர், தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட முக்கியமான கேபினட் அமைச்சர்கள் அனைவருமே புதுச்சேரி பரப்புரைக்கு வருவார்கள் என தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இந்த தேர்தலில் போட்டியிடாதது குறித்து பேசிய ராஜீவ் சந்திரசேகர், முதல்வராக இருந்த ஒருவர் தேர்தலில் கூட போட்டியிடாமல் பயந்து ஒதுங்கியுள்ளார். இதிலிருந்தே காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை மக்கள் அறிந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

click me!