
தமிழக மீனவர்களுக்கு எதிராக தொடரும் இலங்கையின் இத்தகைய அடாவடிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இலங்கை நீதிமன்றம்
ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 24-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனவர்களுக்கு ஜாமின் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, தமிழக மீனவர்கள் ஜாமினில் செல்ல வேண்டுமென்றால் நபர் ஒருவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு டிடிவி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டிடிவி.தினகரன் அதிர்ச்சி
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை பிணையில் விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 கோடியை செலுத்த உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக மீனவர்களுக்கு எதிராக தொடரும் இலங்கையின் இத்தகைய அடாவடிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் படும் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரடியாக தலையிட்டு, இலங்கை சிறையில் வாடும் இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.