
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் மனுசிங்வி, முகுல் ரோஹ்தகி, ராகேஷ் திவேதி உள்ளிட்டோரை நியமித்து நல்லபடியாக வாதிட்டது. இந்த சட்டப் பிரச்சினையை நல்ல முறையில்தான் தமிழக அரசு கையாண்டு இருக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், "வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக பாமக சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், என்னுடைய தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினோம். மேலும் இந்த சந்திப்பில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக விரைவில் மீண்டும் ஒரு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக அவர் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அதை நியாயப்படுத்த வேண்டும். வன்னியர்களின் சமூக பின்தங்கிய நிலை குறித்த புள்ளி விவரங்களை வைத்து, இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளதாக கூறினார். உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அனைத்து அதிகாரமும் இருக்கிறது. ஒரு சமுதாயத்திற்கு குறிப்பிட்ட அளவில் இட ஒதுக்கீடு வழங்கலாம். உள் ஒதுக்கீடு கூட கொடுக்கலாம். இந்திய அரசியலமைப்பு சட்டம் 9-வது அட்டவணையிலே பாதுகாக்கப்பட்ட 69 சதவீத இட ஒதுக்கீட்டில் சட்டத்திருத்தம் தேவையில்லை என்றும், இதற்காக குடியரசுத் தலைவரிடம் செல்ல தேவையில்லை என்பது உள்ளிட்ட சாதகமான அம்சங்கள் குறித்து முதல்வரிடம் விளக்கி கூறியதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரு பெரிய சமுதாயமான வன்னியர்கள், மிக பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும்.எனவே இது யாருக்கும் பாதகமான மற்றும் எதிரான இட ஒதுக்கீடு கிடையாது . இதில் அனைவரது பங்கும் இருக்கிறது. எந்தெந்த சமூகங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறதோ, அதை முன்னுக்குக் கொண்டு வருவது அரசின் கடமை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.இதனிடையே 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக கூடுதல் விவரங்களை சேகரித்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டத்தைக் கொண்டுவந்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக் கொண்டதாக கூறினார். விரைவில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து நல்ல சாதகமான நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்ததாக தெரிவித்தார்.
இறுதியாக, தமிழக அரசு சார்பில் அபிஷேக் மனுசிங்வி, முகுல் ரோஹ்தகி, ராகேஷ் திவேதி போன்ற நல்ல மூத்த வழக்கறிஞர்களை வைத்துதான் வாதிட்டார்கள் என்றும் நல்ல முறையில்தான் தமிழக அரசு இந்த சட்டப் பிரச்சினையை கையாண்டு இருக்கிறது என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது கட்சியின் நிறுவனர் ராமதாஸின் கடிதத்தை முதல்வரிடம் கொடுத்துள்ளோம்.முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 10.5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடவில்லை என்று குற்றச்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.