
பெண் பாவம் பொல்லாதது என்றும், எனவே சொத்து வரியை தமிழக முதலமைச்சர் உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தி பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அத்திட்டங்களை மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனமும் திமுக அரசுக்கு எதிராக இருந்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்றும், திமுக கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி உள்ள நிலையில் அதிமுகவை காட்டிலும் பாஜகவே அதை கடுமையாக விமர்சித்து வருகிறது. சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் பாஜக சட்டமன்ற குழு கொறடா நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர் காந்தி, வானதி சீனிவாசன் மற்றும் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பினர். அப்போது செய்தியாளர் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:- மோடி உலகின் ஒப்பற்ற தலையாய தலைவராக இருந்து வருகிறார், உக்ரைன் போரில் சமாதானம் செய்யும் தலைவராகவும், சீன-அமெரிக்க இடையில் பிரச்சினைகளையும் சமாதானம் செய்யும் தலைவராக மோடி உள்ளார். தமிழகத்தில் இன்று4 பேராக உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை எதிர்வரும் சட்டமன்றத்தில் 40 பேராக உயரும், அதற்கு அடுத்த தேர்தலில் 140 பேர் ஆகவும் மாறுவோம்.
பிற மாநிலங்களை காட்டிலும் 24 சதவீதம் அதிக நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வரியை ஒழுங்குமுறை செய்ய சொன்னார்களே தவிர வரியை உயர்த்த சொல்லவில்லை, மொத்தத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் தான் சொத்து வரி செலுத்துகிறார்கள், எனவே பெண் பாவம் பொல்லாத து உடனே முதலமைச்சர் சொத்துவரி உயர்வை திரும்ப்பெற வேண்டும். அதிமுக ஆட்சியில் வேலுமணி அறிவித்தபோது சொத்து வரி விதிப்பா? சொத்துக்களை அபகரிக்கப்பட்ட வரியா? என எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கூறினார் என்றார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பேசும்போது எதிர்க் கட்சியில் உள்ள நாங்கள் பேச முடிவதே இல்லை, பாஜக உறுப்பினர்கள் பேசுவதற்கு குறைவான கால அவகாசமே வழங்கப்படுகிறது. நிதி அமைச்சருக்கு மாநில அரசு நிதி ஆதாரத்தை பெருக்குவதில் உள்ள கவலையை விட, தான் எங்கு படித்தேன், தனது குடும்பத்தின் பெருமை என்ன என்று பேசுவதிலேயே அதிக கவலைப்படுகிறார். மத்திய அரசு வசூலிக்கும் வரியில் 41 அல்லது 42% மாநில்களுக்கு கொடுக்கப் படவேண்டும், ஆனால் அதில் 24 சதவீதம் கூடுதலாக மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. தமிழக அரசு மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதிகளையும் கடன்களையும் கொடுக்க வேண்டும். மத்தியஅரசு கொடுத்துள்ள கடனில் தமிழக அரசு எவ்வளவு நிதி அளித்துள்ளது என்ற தகவலையும் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.