பணபலத்தால் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் துரோகக் கூட்டம் காற்றடித்தால் கலையும் மேகம் போல வரும் தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், இவ்வுலகம் மட்டும் அல்ல எவ்வுலகம் அழிந்தாலும் என்றைக்கும் அழியாதிருக்கும் அம்மா அவர்களின் புகழ். அப்படி கோடான கோடி மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் நமது இதயதெய்வத்தின் புகழை. கொள்கைகளை, லட்சியத்தை கட்டிக்காப்பது நம் அனைவரின் தலையாய கடமை. ஏற்றி விடும் வரை ஏணி... ஏறிய பிறகு 'ஏன் நீ' என்ற வரிகளுக்கு ஏற்ப, தங்களை அடையாளப் படுத்தி, அங்கீகாரம் வழங்கி, அதிகாரத்தில் அமரவைத்தவர்களை அலட்சியப் படுத்தியதோடு, தன் பதவியைத் தக்க வைக்க உதவியவர்களையே உதறித் தள்ளிய இந்த துரோகக் கூட்டம் தான் அம்மா அவர்களின் புகழைக் காக்கப் போகிறதா?
சுயநலத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் அம்மாவின் கொள்கைகளைத் துச்சமென நினைத்து தூக்கியெறிந்து செல்வோர் எதற்காக செல்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மரத்தை விட்டு உதிரும் சருகுகள் காலப்போக்கில் காணாமல் போய்விடும். ஆனால், வேர் என்பது மரத்தை என்றுமே தாங்கி நிற்கும். கழகத்தைக் காக்கும் ஆணி வேராக அம்மா அவர்களின் உண்மை விசுவாசிகள் நீங்கள் இருக்கையில் சருகுகள் உதிர்ந்தால் என்ன? பணபலத்தால் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் துரோகக் கூட்டம் காற்றடித்தால் கலையும் மேகம் போல வரும் தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள். தன்னிலை அறியாமல், தலை கால் புரியாமல் ஆடும் துரியோதன கூட்டம் இருந்த இடம் தெரியாமல் போவதற்கான நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. நயவஞ்சகமும், நரித்தனமும் நிறைந்த அந்த கூட்டத்திற்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. நாம் யாரென்று தெரியப் போகின்ற காலமும் வந்துவிட்டது.
ஒருபுறம் துரோகிகள் என்றால் மறுபுறம் நம் எதிரிகள். புரட்சித் தலைவர் அவர்களால் தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட திமுக எக்காலத்திற்கும் திருந்தாது என்பதற்கு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அலங்கோல ஆட்சியே சாட்சி. பத்தாண்டு காலம் அகோர பசியில் இருந்தவர்கள் கண்ணில் படுவதை எல்லாம் அள்ளிச் சுருட்டிக் கொண்டிருப்பதை எண்ணி மக்கள் வருந்துகிறார்கள். விடியலைத் தருகிறோம் என்று விதவிதமாக இவர்கள் சொன்ன பொய்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு, விடியல் என்பது நமக்கில்லை, அந்த ஒரு சில குடும்பங்களுக்கு மட்டும் தான் என்பது இப்போது புரியத் தொடங்கிவிட்டது. தன் வீட்டு நலனை மட்டுமே சிந்திப்பவர்களுக்கு நாட்டு நலனை பற்றி சிந்திக்க நேரம் எப்படி இருக்கும் ?
அம்மா உணவகம், தாலிக்குத் தங்கம், மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி, விலையில்லா சைக்கிள், விலையில்லா அரிசி, மகளிர் சுய உதவிக்குழுக்கள் என மக்களுக்காகவே சிந்தித்து புரட்சித் தலைவி அம்மா அவர்கள் செயல்படுத்திய நாடு போற்றும் பொன்னான திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு, மக்களின் வெறுப்பை மட்டுமே சம்பாதித்திருக்கிறது இன்றைய ஆளும் திமுக அரசு. எங்கு பார்த்தாலும் கொலை,கொள்ளை,பாலியல் வன்முறைகள், வெடிகுண்டு கலாச்சாரம், போதைப் பொருட்கள் நடமாட்டம், சாதிய படுகொலைகள் என அக்கிரமங்களாலும் தமிழ்நாடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அநியாயங்களாலும்
இங்கு சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை. ஆளுங்கட்சி ரவுடிகளும் குண்டர்களும் வைத்தது தான் சட்டமாக உள்ளது. தங்களின் நில உரிமைக்காக அறவழியில் போராடும் விவசாயிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதன் மூலம் ஆட்சியின் லட்சணம் அனைவருக்கும் புரிகிறது. அரிசி பருப்பில் இருந்து வெங்காயம், தக்காளி வரை விலைவாசி விண்ணை நோக்கி பறந்து கொண்டிருக்கிறது. மின் கட்டணம், பேருந்து கட்டணம், பத்திரப்பதிவு கட்டணம், பால்விலை என அனைத்தையும் உயர்த்தி மக்களை இருளில் தள்ளிய இருட்டு கூட்டமா தமிழக மக்களுக்கு விடியலை தரப்போகிறது? எந்நாளும் தங்கள் குடும்பத்தின் வசமே ஆட்சி அதிகாரம் அனைத்தும் இருந்திட வேண்டும் என்று துடிக்கின்ற தீய சக்தியிடமிருந்தும்,
மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாத துரோகிகள் கூட்டத்திடமிருந்தும் தமிழக மக்களை காத்திட அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றி பெற்று அம்மா அவர்களின் உண்மையான வாரிசுகள் நாம் தான் என்பதை உலகுக்கு உரக்கச் சொல்ல தயாராவோம். மக்களை மறந்த ஆட்சியாளர்களை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பவும், துரோகக் கூட்டத்தை அடியோடு துடைத்து எறியவும் டிசம்பர் 5 ஆம் தேதி அம்மா அவர்களின் நினைவிடத்தில் கூடி உறுதியேற்றிடுவோம். அம்மா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவதோடு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக் கனியை கொய்து அம்மா அவர்களின் புகழுக்கு பெருமைச் சேர்த்திட சபதமேற்றிடுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்