ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் வருகிற ஜூன் 7 ஆம் தேதி தேதி வைத்தியலிங்கம் இல்லத்தில் நடைபெறும் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதால் ஜூன் 7 ஆம் தேதி நடைபெறவிருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் ஜூன் 20 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் அதிகார மோதல்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என 4 பிரிவாக பிரிந்துள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 3 பேரும் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே டிடிவி தினகரனை சந்தித்து பேசியிருந்தார். விரைவில் சசிகலாவையும் சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் , தஞ்சாவூரில் ஜூன் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள தனது மகன் சண்முக பிரபுவின் திருமணத்திற்கு வரும்படி டிடிவி தினகரன் இல்லத்துக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
ஒன்றினையும் ஓபிஎஸ்,டிடிவி,சசிகலா
இந்த அழைப்பு ஏற்று ஜூன் 7 ஆம் தேதி நடைபெறவிருந்த அமமுக செயற்குழுக்கூட்டம் ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதன் மூலம் வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் டிடிவி தினகரன் கலந்துக்கொள்வது உறுதி எனவும் அதற்காக தான் செயற்குழு ஒத்திவைத்துள்ளதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று நேற்று திருமதி சசிகலாவுக்கும் வைத்திலிங்கம் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார். அவரும் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. எனவே எடப்பாடிக்கு அணிக்கு எதிராக சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் சந்தித்து அடுத்த கட்டமாக எடப்பாடி அணிக்கு எதிராக களம் இறங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
இதையும் படியுங்கள்