காங்கிரஸ் கட்சி உடனான உறவை முறித்து கொள்வோம் என திமுக எச்சரிக்கனும்.! ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்யும் ஓபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Jun 1, 2023, 10:36 AM IST

மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக துணை முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 


மேகதாது அணை- கர்நாடக அரசு தீவிரம்

மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு நடவடிக்கை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதையடுத்து, 30-05-2023 அன்று நடைபெற்ற நீர்பாசனத் துறை உயர் அதிகாரிகளுக்கான கூட்டத்திலேயே மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்குத் தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டுமென்றும் கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி. நீரை மாதாந்திர அட்டவணையின்படி கர்நாடகம் அளிக்காத நிலையில், 

Tap to resize

Latest Videos

மேதாதுவில் அணையா? கர்நாடகா துணை முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்

மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் கூறி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். காவேரி ஆறு பாயும் மாநிலங்களில், கர்நாடகம் மேல் நதிக்கரை மாநிலமாக விளங்குவதால், கூடுதலாக அணை கட்டுவதற்கு கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியை பெற்றே ஆகவேண்டும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மேகதாது அணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாண்புமிகு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அவமதிப்பதாகும். கர்நாடக மாநில துணை முதலமைச்சரின் இந்தக் கூற்று தமிழகத்திற்கு வரும் காவேரி ஆற்றின் நீரைத் தடுத்து நிறுத்துவதற்கு சமம்.

ஒட்டுமொத்த விவசாயமும் பாதிக்கும்

ஏற்கெனவே காவேரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீருக்குப் பதிலாக உபரி நீர் தான் கிடைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், மேகதாது அணை திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாட்டிற்கு வருகின்ற நீர் முற்றிலும் நின்றுவிடும் அபாயம் ஏற்படும். மேகதாது அணைத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதன்மூலம் 67 டி.எம்.சி. நீரை கர்நாடகம் கூடுதலாக தேக்கிக் கொள்ளலாம். ஏற்கெனவே போதிய நீர் இல்லாததன் காரணமாக சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில், நிலத்தடி நீர் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால் ஒட்டுமொத்த விவசாயமும் வெகுவாகப் பாதிக்கப்படும். தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகும்.

மேகதாது அணை-கைவிடப்பட வேண்டும்

கர்நாடக மாநிலத்தின் இந்த நிலைப்பாடு காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும். இதுபோன்ற நடவடிக்கை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்று சொல்வதற்கு சமம். மாண்புமிகு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் ஏநோ விவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் என்ற தொனியில் மாண்புமிகு நிர்வளத் துறை அமைச்சர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை நகைப்புக்குரியதாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மேகதாது அணைத் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு. தமிழ்நாட்டில் நடைபெறுவது தி.மு.க. ஆட்சி. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர பாடுபட்ட தமிழ்நாடு முதலமைச்சர்,

காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறிக்க வேண்டும்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கர்நாடக அரசிடம் பேசியும், காங்கிரஸ் மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்தும், சட்டத்திற்கு புறம்பான மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இசையவில்லை என்றால், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 45 லட்சம் ரூபாயை பறித்த பாஜக மாநில நிர்வாகி..! அதிரடியாக கைது செய்த போலீஸ்

click me!