
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சித்துவுக்கு எதிராக வேட்பாளராக களமிறங்குவேன். சித்துவுக்கு மக்கள் மக்களின் ஆதரவு இல்லை என்பதை நிரூபித்து காட்டுவேன் என்று அமரீந்தர் சிங் சவால் கூறியுள்ளார்.
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததால் அம்மாநில புதிய முதல்வராக சரண் ஜித் சிங் சன்னி பதவியேற்றார். இவருடன் சேர்ந்து இருவர் துணை முதல்வராக பதவியேற்றனர். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாத நிலையில் முதல்வர் சரண் ஜித் சிங் நேற்றிரவு கட்சியின் மூத்த தலைவர்களை சந்திப்பதற்காக டெல்லிக்கு சென்றார்.
அப்போது ராகுல் காந்தியை சரண் ஜித் சிங் சந்தித்ததாகவும் அமைச்சரவையில் யாரை எல்லாம் சேர்க்கலாம் என்பது குறித்து பட்டியலை அவரிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் புதிய அமைச்சரவை குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும், அதன் தொடர்ச்சியாக புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்;- பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து. எனக்கு எதிராக செயல்பட தொடங்கியுள்ளார். இப்போது அவர் கட்சி தலைவராக உள்ளார். அவர் விரும்பினால் என்னை கட்சியிலிருந்து வெளியேற்ற முடியும். முடிந்தால் என்னை கட்சியில் இருந்து நீக்கட்டும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் எல்லையில் இந்திய வீரர்களை கொல்ல உத்தரவிட்டவர்களுடன் சித்துவுக்கு நட்பு இருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும். சில நண்பர்கள் இந்தியாவில் உள்ளனர். என்னை பொறுத்தவரையில் தேசத்தின் பாதுகாப்பு முதலிடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சித்துவுக்கு எதிராக வேட்பாளராக களமிறங்குவேன். சித்துவுக்கு மக்கள் மக்களின் ஆதரவு இல்லை. அவரால் மக்கள் கூட்டத்தை கூட்டி வாக்குகளை பெற முடியாது. கடந்த மக்களவைத் தேர்தலில் பதிந்தா மற்றும் குர்தாஸ்பூர் தொகுதிகளின் பொறுப்பு அளிக்கப்பட்டது. அந்த இரு இடங்களிலும் காங்கிரஸ் தோற்றது குறிப்பிடத்தக்கது.