கமல் என்னிடம் ஆலோசனையே கேட்பதில்லை... மநீமவில் இருந்து வெளியேறுகிறாரா பழ.கருப்பையா?

By vinoth kumarFirst Published Sep 25, 2021, 7:12 PM IST
Highlights

மக்கள் நீதி மய்யம் கட்சியில் அரசியல் ஆலோசகராக மட்டுமே  கமல்ஹாசன் என்னை நியமனம் செய்தார். ஆனால், இதுவரை என்னிடம் எந்த வித ஆலோசனையும் கேட்டதில்லை என்ற கருத்தை மட்டுமே நான் கூறினேன். 

கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்தும் தன்னிடம் கமல்ஹாசன் இதுவரை எந்த ஆலோசனையும் கேட்கவில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்ள பழ.கருப்பையா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காமராஜரை தலைவராக ஏற்றுக் கொண்டு காங்கிரஸ் கட்சியில் அரசியல் பயணத்தை  பழ. கருப்பையா தொடங்கினார். 1969-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்ட போதும் காமராஜரின் சிண்டிகேட் காங்கிரஸில் தான்  பழ. கருப்பையா இருந்தார். காமராஜர் மறைவுக்குப் பின்னர் ஜனதா கட்சியிலும், ஜனதா கட்சி பிளவுபட்ட நிலையில் ஜனதா தள் கட்சியிலும் பயணித்தார் பழ. கருப்பையா. இதனையடுத்து, திமுக, அதிமுக கட்சியிலும் இருந்துள்ளார். 2011ம் ஆண்டு அதிமுக சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 

பிறகு அந்த கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதையடுத்து ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, திமுக தலைவராக இருந்த கருணாநிதி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். ஆனால், அங்கேயும் அதிருப்தி காரணமாக வெளியேறி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் ஆலோசகராக பழ.கருப்பையா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தனியார் சேனலுக்கு பேட்டியளித்த பழ.கருப்பையா;- மக்கள் நீதி மய்யம் கட்சியில் அரசியல் ஆலோசகராக மட்டுமே  கமல்ஹாசன் என்னை நியமனம் செய்தார். ஆனால், இதுவரை என்னிடம் எந்த வித ஆலோசனையும் கேட்டதில்லை என்ற கருத்தை மட்டுமே நான் கூறினேன். கட்சி அடுத்த கட்டத்திற்கு  செல்ல வேண்டும் என்றும் தற்போது விட வேகமாக செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. வேறு எந்த கட்சிக்கும் செல்லும் எண்ணம் எனக்கில்லை. குறிப்பாக அதிமுக மற்றும் திமுகவிற்கு மீண்டும் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

click me!