”முத்தலாக்”கிற்கு முற்றுப்புள்ளி..? நாடாளுமன்றத்தில் இன்று மசோதா தாக்கல்..!

First Published Dec 28, 2017, 11:06 AM IST
Highlights
triple talaq bill to be introduced in parliament today


முத்தலாக் முறைக்கு தடைவிதிக்கும் வகையில் இயற்றப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தி இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறை இஸ்லாமியர்களிடம் வழக்கமாக உள்ளது. முத்தலாக் முறையால் வாழ்வை இழந்து பல இஸ்லாமிய பெண்கள் தவித்து வருகின்றனர். சட்டம் இயற்றி முத்தலாக் முறைக்கு தடை விதிக்க இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இஸ்லாமிய மதத்தின் முறைகளில் அரசு தலையிட நினைப்பதாக குற்றச்சாட்டுகளையும் இஸ்லாமிய அமைப்புகள் முன்வைக்கின்றன. அனைத்து மதத்தினரும் அவர்களின் மத நம்பிக்கைகளையும் நெறிமுறைகளையும்  பின்பற்ற அரசியல் சாசனத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே முத்தலாக்கிற்கு தடை விதிப்பது என்பது மத ரீதியாக அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், அதேநேரத்தில் பெண்கள் உரிமையை பறித்து அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் இந்த முறையை தடை செய்ய வேண்டும் என்ற குரல் இஸ்லாமிய பெண்களிடையே கூட எழுந்துள்ளது. இஸ்லாமிய பெண்களின் வாழ்வுரிமைக்காகவே முத்தலாக்கை தடை செய்ய அரசு முனைகிறதே தவிர, எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தது.

முத்தலாக்கிற்கு எதிரான பல்வேறு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், அதை தடை செய்யும் வகையிலான சட்டத்தை ஆறு மாத காலத்துக்குள் இயற்ற வேண்டும் எனவும் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. அதுவரை முத்தலாக் முறைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து முத்தலாக் தடை சட்ட மசோதா தயார் செய்யப்பட்டு அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது. இந்நிலையில், இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவு அளித்து அதை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

click me!