
பாஜகவுடன் இணக்கமான உறவுடன் இருந்ததுதான் ஆர்.கே.நகரில் அதிமுகவின் தோல்விக்குக் காரணம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக, மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே பல்வேறு சம்பவங்களும் அரங்கேறின.
அதிமுகவை யார் வழிநடத்த வேண்டும் என்பதுவரை அனைத்தையுமே பாஜக தலைமை தீர்மானிப்பதாக எழுந்த விமர்சனங்களையும் உறுதிப்படுத்தும் வகையில்தான் நிகழ்வுகள் அமைந்தன. இவ்வாறு, அதிமுக என்ற கட்சியிலும் தமிழகத்தின் ஆட்சியிலும் மறைமுகமாக பாஜக ஆதிக்கம் செலுத்துவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இதற்கிடையே ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு ஆர்.கே.நகரில் தினகரனிட அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் பலரும், சில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் என பலரும் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க உள்ளதாக எழுந்துள்ள தகவல்களால் அதிமுகவில் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கலக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டதுதான் ஆர்.கே.நகரில் அதிமுகவின் தோல்விக்குக் காரணம். பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கான தண்டனையை அனுபவித்துவிட்டோம். இனிமேல் பாஜகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்ற ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை செயல்படுத்த உள்ளோம்.
பாஜகவுடன் இணக்கமாக இருந்ததால் ஆர்.கே.நகரில் இஸ்லாமியர்களின் ஓட்டுகள் அனைத்தும் தினகரனுக்கு சென்றுவிட்டது. மேலும் அதிமுகவை பற்றி பாஜக தலைவர்களும் சில மத்திய அமைச்சர்களும் பேசுவதை மக்கள் விரும்பவில்லை. எனவே பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.